மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச உடன்படிக்கையின் கீழ் நடைபெறும் 35ஆவது குழு அமர்வில் பங்கேற்பதற்காக, கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னில தலைமையிலான இலங்கைக் குழுவினர் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகருக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் தலைமையகத்தில் நடைபெறவுள்ள இந்த அமர்வில், குறித்த உடன்படிக்கை தொடர்பாக இலங்கை சமர்ப்பித்துள்ள முதலாவது அறிக்கை மீளாய்வு செய்யப்படவுள்ளது.
அமைச்சர் கலாநிதி உபாலி பன்னில தலைமையிலான இந்த அதிகாரப்பூர்வ தூதுக்குழுவில், கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளர் திரு. சம்பத் மந்திரீநாயக, சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திருமதி கனிஷ்கா டி சில்வா பாலபட்டபெந்தி மற்றும் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் பணிப்பாளர் திருமதி திலினி ஜயசேகர ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மேலும், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான ஐ.நா உடன்படிக்கையை இலங்கையில் செயல்படுத்துவதில் நேரடியாகப் பங்களிக்கும் ஏனைய அமைச்சுகள் மற்றும் நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் இணையவழி ஊடாக இந்த அமர்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.
இலங்கையிலிருந்து புறப்படுவதற்கு முன்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் உபாலி பன்னில, புதிய அரசாங்கத்தின் கீழ் கடந்த 18 மாத காலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காகப் பல கொள்கை ரீதியான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் நலனுக்காகப் பெருமளவிலான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அதன்படி, இலங்கை வரலாற்றில் முதன்முறையாக மாற்றுத்திறனாளி ஒருவர் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார் என்றும், அவர் மாற்றுத்திறனாளிகளுக்கான நாடாளுமன்ற மன்றத்தின் தலைவராகச் செயற்பட்டு, சட்டவாக்கச் செயற்பாடுகளில் தீவிரமாகப் பங்களித்து வருகிறார் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் பற்றிய சட்டத்தைத் திருத்துவதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதுடன், அது தற்போது சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தாா்.
மேலும், “சைகை மொழிச் சட்டம்” அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், அது விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்த அவர், கல்வி, போக்குவரத்து, வீடமைப்பு மற்றும் நீர் வழங்கல் உள்ளிட்ட பல்வேறு அமைச்சுகள் இணைந்து மாற்றுத்திறனாளிகளின் தேவைகளுக்காக ஒருங்கிணைந்து செயற்பட்டு வருவதாகவும் வலியுறுத்தினார்.
இந்த முக்கிய அமர்வு இன்றும் நாளையும் (14 மற்றும் 15) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


