சேருவில மங்கள ராஜமகா விகாரை முன்னே கடலோர வேடர்களின் தேன் பூஜை இடம்பெற்றது

0
7

கிழக்குக் கரையில் வசிக்கும் தமிழ் மொழியைப் பேசும் கடலோர வேடர் சமுதாய மக்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க சேருவில ஸ்ரீ லலாட தாது மகா பெரஹரா விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் நடத்தும் பாரம்பரிய தேன் பூஜை நேற்றைய தினம் சேருவில மங்கள ராஜமகா விகாரையில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

கடலோர வேடர்களின் தலைவரான நடராஜா கனகரத்தினம் தலைமையிலான பழங்குடியின மக்கள் பக்தி சிரத்தையுடன் எடுத்து வந்த தேன் குடம், சேருவில மங்கள ராஜமகா விகாராதிபதி வணக்கத்திற்குரிய அலுதெனியே சுபோதி நயினாக தேரரிடம் சடங்கு பூர்வமாக கையளிக்கப்பட்டது.

பழங்குடியின மக்கள் மங்கள மகா ஸ்தூபியை வலம் வந்து வழிபட்டதைத் தொடர்ந்து தேன் பூஜை இடம்பெற்றது.

இப் பூஜையானது பழங்குடியின மக்களுக்கு இலகுவில் புரியும் வகையில் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் நடத்தப்பட விகாராதிபதி தேரரால் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகரவின் ஆலோசனையின் பேரில், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் இந் நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது.

புண்ணிய நிகழ்வின் நிறைவில், சேருவில விகாராதிபதி தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர் பிரீத் நூல் வழங்கி, கடலோர வேடர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கினர்.

இக் கடலோர வேடர்கள் சாதி வேறுபாடு காரணமாக தமிழ் சமூகத்திலிருந்தும், மதம் காரணமாக முஸ்லிம் சமூகத்திலிருந்தும், மொழி காரணமாக சிங்கள சமூகத்திலிருந்தும் ஒதுக்கப்பட்ட ஒரு தனித்துவமான மக்கள் குழுவினராவர்.

வெருகல், மூதூர் போன்ற பகுதிகளில் உள்ள 27 கிராமங்களில் பரந்து வாழும் இவர்கள், சேருவில ஸ்ரீ லலாட தாது மகா பெரஹராவில் தங்களின் பாரம்பரிய நடனங்களையும் கலைகளையும் செய்து வருகின்றனர்.

இவர்களுக்காக எப்போதும் குரல் கொடுத்து, அவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அன்புடன் தலையிட்டு உதவி செய்வதால், கடலோர வேடர் தலைவர் உட்பட அப்பகுதி மக்கள் சேருவில விகாராதிபதி தேரருடன் மிகவும் நெருக்கமாகச் செயல்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here