இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட சிரியாவின் கோலான் குன்றுகள் தொடர்பான கொலம்பியாவின் சமீபத்திய நடவடிக்கைக்கு சவூதி அரேபிய வெளியுறவு அமைச்சு தனது பலத்த கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
கொலம்பியாவின் இந்த முடிவு சர்வதேச சட்டங்களுக்கும், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் 497 ஆவது தீர்மானத்திற்கும் முற்றிலும் எதிரானது என சவூதி வெளியுறவு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
1981 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இத்தீர்மானத்தின்படி, கோலான் குன்றுகள் மீதான இஸ்ரேலின் சட்டங்களும் நிர்வாகமும் செல்லுபடியாகாது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள சவூதி வெளியுறவு அமைச்சு, இத்தகைய நிலைப்பாடுகள் பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்த உதவாது என்றும், சர்வதேச அளவிலான நிலைப்பாட்டிலிருந்து விலகிச் செல்வதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
ஆக்கிரமிக்கப்பட்ட கோலான் குன்றுகள் சிரிய அரேபிய நாட்டிற்குச் சொந்தமான நிலப்பகுதியாகும் என்பதில் சவூதி அரேபியா உறுதியாக உள்ளது.
அதன் சட்டப்பூர்வ நிலையை மாற்ற முயலும் எந்தவொரு நடவடிக்கையும் அதற்கு அங்கீகாரத்தையோ உரிமையையோ தந்துவிடாது.
எனவே, கொலம்பியா தனது நிலைப்பாட்டை உடனடியாக மறுபரிசீலனை செய்து, சர்வதேச சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என சவூதி அரேபியா கேட்டுக்கொண்டுள்ளது.
