இலங்கையில் சைவ சமய வளர்ச்சிக்கும் கலாசாரப் பாதுகாப்புக்கும் அரிய தொண்டாற்றி வரும் ஆன்மீகப் பெரியார் கலாநிதி சின்னத்துரை தனபாலா அவர்களின் ஆன்மீக மற்றும் சமூகப் பணிகளைப் போற்றும் “சைவப்பணிகள் போற்றுவாம்” சிறப்பு விழா, இலங்கைச் சைவநெறிக் கழகத்தின் ஏற்பாட்டில் அண்மையில் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

அகில இலங்கை இந்து மாமன்றத்தின் பிரதித் தலைவராகவும், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபையின் தலைவராகவும் சிறப்பாகச் செயற்பட்டு வரும் கலாநிதி சின்னத்துரை தனபாலா அவர்கள், கொழும்பு சைவ முன்னேற்றச் சங்கத்தின் தலைவராகவும் பல ஆண்டுகள் மகத்தான சைவத் தொண்டாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் சிவப்பணியிலும் சைவ சமூகப்பணியிலும் 50 ஆண்டுகளை நிறைவு செய்து பொன்விழா காண்பதுடன், தமது பவள விழாவையும் கொண்டாடுகிறார்.

சைவ சமய மற்றும் பண்பாட்டு விழாக்களில் விடைக்கொடி (நந்திக் கொடி) ஏற்றித் தொடங்கும் பாரம்பரியத்தை மக்களிடையே கொண்டு சேர்த்து வெற்றி கண்ட காரணத்தால் இவர் “விடைக்கொடிச் செல்வர்” எனவும், “சைவநெறிக் காவலர்” எனவும் அனைவராலும் போற்றப்படுகின்றார்.

மேலும், “நந்திக் கொடி ஏற்றீர்! கொடிக் கவி பாடீர்!” உள்ளிட்ட பல ஆன்மீக நூல்களை எழுதியுள்ள இவர், நாவலர் கலாசார மண்டபம் போன்ற ஆன்மீக நிலையங்களின் மேம்பாட்டுக்கும் தொடர்ச்சியாகப் பங்காற்றி வருகின்றார்.

“இடபக்கொடி போற்றுவாம்! விடைக்கொடிச் செல்வர் வாழ்த்துவாம்!” எனும் பொருண்மையில் நடைபெற்ற இவ்விழா கொழும்பு சைவ மங்கையர் வித்தியாலயத்திலிருந்து தொடங்கியது. அருள்மிகு சிவகாமிஅம்மை உடனாய கூத்தப்பெருமான் கயிலாய வாத்தியம் முழங்க திருவீதிக்கு எழுந்தருள, பக்திப் பரவசத்துடன் இடபக்கொடி ஊர்வலம் கோலாகலமாக நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் சிறப்பு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் சைவ சமயத்தின் அடையாளமான இடபக்கொடியின் பெருமைகளும் தத்துவங்களும் எடுத்துரைக்கப்பட்டதுடன், சைவத்திருவாளர் கலாநிதி சின்னத்துரை தனபாலா அவர்களின் அரை நூற்றாண்டு காலச் சைவப் பணிகளைப் பாராட்டி சான்றோர்களால் வாழ்த்துரைகள் வழங்கப்பட்டதோடு பொன்னாடை போர்த்தி கிரீடம் அணிவித்து மலர்மாலைகளும் சந்தன மாலைகளும் சூட்டி பெருமைபடுத்தப்பட்டது.

மேலும், விழாவின் முக்கிய அங்கமாக ஆன்மீகச் சிறப்பு நூல் வெளியீடும், இலங்கைச் சைவநெறிக் கழகத்தின் எதிர்காலச் சமயப் பணிகள் குறித்த கலந்துரையாடலும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

இவ்விழாவில் பெருந்திரளான சைவப் பெருமக்களும், ஆன்மீக அன்பர்களும், சமூகப் பெரியார்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


