களனி கங்கையில் பெருவெள்ள அபாயம்; பேரதெனிய பல்கலைக்கழக வகுப்புகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

0
5

இலங்கையின் பல பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாகக் களனி கங்கையின் மேல் மற்றும் மத்திய நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, நீர்ப்பாசனத் திணைக்களத்தால் சிவப்பு (Red Alert) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாகத் தெஹியோவிற்ற, ருவன்வெல்ல மற்றும் யட்டியாந்தோட்டை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட தாழ்நிலப் பகுதிகள் பெரும் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், ஆற்றைப் பயன்படுத்துவோர், அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தீவிர விழிப்புணர்வுடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மையம் கேட்டுக்கொண்டுள்ளது.

அத்துடன், திட்கோயா நீர்த்தேக்கம் நிரம்பி வழிகுவதைத் தொடர்ந்து ஹட்டன், நாவலப்பிட்டி, யட்டியாந்தோட்டை நவத பகுதி மற்றும் கித்துல்கல ஆகிய இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழையால் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் மரங்கள் முறிந்து விழுந்த நிகழ்வுகள் காரணமாக ஹட்டன் – கண்டி பிரதான வீதியில் போக்குவரத்து முற்றிலுமாகத் தடைபட்டுள்ளதுடன், ஹட்டன் – கொழும்பு வீதியிலும் வெள்ளப்பெருக்கு காரணமாகப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மகாவலி கங்கையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாலும் சுற்றியுள்ள பகுதிகளில் மண்சரிவு அபாயம் நிலவுவதாலும், பேரதெனிய பல்கலைக்கழகத்தின் அனைத்துக் கல்வி நடவடிக்கைகளும் மறுஅறிவித்தல் வரும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் அறிவித்துள்ளார்.

அங்கு விடுதிகளில் தங்கியிருந்த மாணவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கும் அவர்களின் சொந்த ஊர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வரும் நிலையில், தங்க வசதி இல்லாத மாணவர்களுக்குப் பல்கலைக்கழகத்திற்குள்ளேயே பாதுகாப்பான தங்குமிட வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.
மத்திய மற்றும் சபரகமுவ மாகாணங்களில் தொடர்ந்து கனமழை எதிர்பார்க்கப்படுவதால், பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here