ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பான வழக்கு: பிள்ளையான் ஜூலை 13 வரை விளக்கமறியலில்! Video

0
9

கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2008ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, முன்னாள் ராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) எதிர்வரும் ஜூலை மாதம் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று (30) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

2008ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த ஐந்து படுகொலைகள் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து, குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் (CID) கடந்த ஜூன் 15ஆம் திகதி நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தனர். இந்த கொலை வழக்கில் பிள்ளையான் மூன்றாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளதால், அவரை இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கடந்த வழக்கு விசாரணையின் போது வெலிக்கடை சிறைச்சாலை அத்தியட்சகருக்கு மட்டக்களப்பு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

இதற்கமைய, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பிள்ளையான் இன்று காலை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பிள்ளையான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டதை முன்னிட்டு நீதிமன்ற வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் கணிசமான அளவில் பலப்படுத்தப்பட்டிருந்தன. அதனைத் தொடர்ந்து வழக்கை பரிசீலித்த நீதவான், சந்தேகநபரை ஜூலை 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here