இந்துக் கல்லூரி கொழும்பு மாணவர்கள் மாகாண மட்டப் போட்டிகளில் வரலாற்றுச் சாதனை – இரு விளையாட்டுகளில் தேசிய மட்டத்திற்குத் தகுதி!

0
8

இந்துக் கல்லூரி கொழும்பு மாணவர்கள் மாகாண மட்ட விளையாட்டுப் போட்டிகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைகளைப் படைத்து, தேசிய மட்டப் போட்டிகளுக்குத் தகுதி பெற்று கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

நிட்டம்புவ உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற 17 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவு மாகாண மட்ட கபடிப் போட்டியில், மொத்தம் 17 முன்னணிப் பாடசாலை அணிகளுடன் போட்டியிட்ட இந்துக் கல்லூரி கொழும்பு அணி 3-ஆம் இடத்தைப் பெற்று அபார சாதனை படைத்துள்ளது.

கல்லூரி வரலாற்றிலேயே கபடிப் போட்டியில் தேசிய மட்டத்திற்குத் தகுதி பெறுவது இதுவே முதன்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. கடுமையான போட்டிகளுக்கு இடையே மாணவர்கள் சிறப்பான திறமையையும் கள ஒழுக்கத்தையும் வெளிப்படுத்தி இந்த வெற்றியைத் தம்வசமாக்கியுள்ளனர்.

அதேபோன்று, நடைபெற்ற மாகாண மட்ட ஏரோபிக் ஜிம்னாஸ்டிக்ஸ் (Aerobic Gymnastics) போட்டிகளிலும் கல்லூரி மாணவர்கள் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.

18 வயதிற்குட்பட்ட Trio பிரிவில் 2-ஆம் இடம் (வெள்ளிப் பதக்கம்) வென்று தேசிய மட்டப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளதுடன், Singles பிரிவில் 4 மற்றும் 5-ஆம் இடங்களைக் கைப்பற்றிச் சாதனை படைத்துள்ளனர்.

இதன்மூலம், இந்த ஆண்டில் நடைபெற்ற மாகாண மட்டப் போட்டிகளில் உடற்பயிற்சிப் போட்டி (Aerobic Gymnastics – U18 Trio) மற்றும் கபடிப் போட்டி (Kabaddi – U17 Boys) ஆகிய இரண்டு முக்கிய விளையாட்டுகளில் இந்துக் கல்லூரி கொழும்பு தேசிய மட்டப் போட்டிகளுக்குத் தெரிவாகி வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளது.

கல்லூரிக்கு அளப்பரிய பெருமை தேடித்தந்த மாணவச் செல்வங்களுக்கும், அவர்களைச் சிறந்த முறையில் பயிற்சிவித்து அர்ப்பணிப்புடன் வழிநடத்திய பொறுப்பாசிரியர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களுக்கு கல்லூரி நிர்வாகமும், பழைய மாணவர்களும், பெற்றோர்களும் தமது மனமார்ந்த வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.

அத்துடன், அடுத்து நடைபெறவுள்ள தேசிய மட்டப் போட்டிகளிலும் மாணவர்கள் பிரம்மாண்ட வெற்றிகளைப் பெற்று கல்லூரிக்கு மேலும் பெருமை சேர்க்க அனைத்துத் தரப்பினரும் தமது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here