இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வருகை!

0
6

இலங்கைக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (செப்டெம்பர் 08) பிற்பகல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.

இந்திய பாதுகாப்பு அமைச்சின் 12 உயர் அதிகாரிகளைக் கொண்ட தூதுக்குழுவினருடன், புதுடெல்லியில் இருந்து இந்திய விமானப்படைக்குச் சொந்தமான IFC-032 ரக சிறப்பு விமானத்தில் புறப்பட்ட அவர், இன்று பிற்பகல் 1.25 மணியளவில் கட்டுநாயக்கவை வந்தடைந்தார்.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த இந்திய பாதுகாப்பு அமைச்சரை, இலங்கையின் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர மற்றும் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் குழுவினர் நேரில் சென்று வரவேற்றனர்.

செப்டெம்பர் 10 ஆம் திகதி வரை தொடரும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க விஜயத்தின் போது, இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்களையும் உயர் அதிகாரிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதையும், பிராந்திய பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்துவதையும் முதன்மை நோக்கமாகக் கொண்டு இந்த விஜயம் அமைந்துள்ளது.

குறிப்பாக, 38 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு வருகை தரும் முதலாவது சந்தர்ப்பம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

தமது மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணங்களை நிறைவு செய்துகொண்டு, இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தூதுக்குழுவினர் செப்டெம்பர் 10 ஆம் திகதி காலையில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து மீண்டும் புதுடெல்லிக்கு புறப்படவுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here