உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்தடைந்துள்ள இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS UDAYGIRI’ போர்க்கப்பலின் அங்கத்தவர்களும், இலங்கை கடற்படையினரும் இணைந்து முன்னெடுத்த விசேட கடற்கரை தூய்மைப்படுத்தும் திட்டம் இன்று (2026 செப்டம்பர் 10) கொழும்பு காலி முகத்திடல் மற்றும் அதனை அண்டிய கடற்கரை பகுதிகளில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

‘INS UDAYGIRI’ போர்க்கப்பலின் இலங்கை விஜயத்தின் போது இரு நாட்டு கடற்படைகளுக்கும் இடையிலான இருதரப்பு நல்லுறவு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதன் ஒரு அங்கமாகவே இக்கடற்கரை தூய்மைப்படுத்தும் பணி இடம்பெற்றது.
இந்நடவடிக்கையில் ‘INS UDAYGIRI’ கப்பலின் மாலுமிகளும், இலங்கை மேற்கு கடற்படை கட்டளையைச் சேர்ந்த கடற்படை வீரர்களும் உற்சாகத்துடன் இணைந்து பங்கேற்றனர்.

இத்திட்டத்தின் மூலம் கொழும்பு காலி முகத்திடல் கடற்கரைப் பகுதியை ஒட்டி சிதறிக்கிடந்த பிளாஸ்டிக், பொலித்தீன் உள்ளிட்ட பெருமளவிலான திடக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு, சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் முறைப்படி அகற்றுவதற்கான நடவடிக்கைகள் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டன.

இரு நாட்டு கடற்படைகளின் இக்கூட்டு முயற்சி கடற்கரை சூழல் பாதுகாப்பிற்கு பெரும் பங்காற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


