இங்கிலாந்து அணியின் முன்னணி சகலதுறை ஆட்டக்காரரான சாம் கரன், தொடை இடுக்கில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த கோடைகாலக் கிரிக்கெட் பருவம் முழுவதிலிருந்தும் விலகியுள்ளார்.
அவருக்கு வெள்ளிக்கிழமை அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளதாகச் சர்ரே கவுண்டி நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.
2021 ஆம் ஆண்டிற்குப் பிறகு மீண்டும் டெஸ்ட் போட்டிகளுக்குத் திரும்ப முயன்ற 28 வயதான சாம் கரனுக்கு இந்த காயம் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே காயங்கள் காரணமாகப் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் அவர் சேர்க்கப்படவில்லை.
ஐபிஎல் 2026 தொடரிலும் காயம் காரணமாக அவர் விளையாடவில்லை என்பதுடன், இது நீண்டகாலமாக அவர் எதிர்கொண்டு வந்த காயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றொரு சர்ரே வீரரான வில் ஜேக்ஸ், குடல்வால் அறுவை சிகிச்சை செய்துகொண்டு தற்போது ஓய்வில் உள்ளார்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் இலங்கைக்கு எதிரான தொடருக்கு முன்னர் அவரது உடற்தகுதி ஆராயப்பட்டுத் தீர்மானம் எடுக்கப்படும்.
இவ்விரு வீரர்களின் வருகை இல்லாத நிலையில், சர்ரே அணி இந்திய வீரர் மஹிபால் லொம்ரோரை தற்காலிகமாகத் தங்கள் அணியில் இணைத்துள்ளது.

