​ரூ. 34 லட்சம் பெறுமதியான 64 வெளிநாட்டுப் புறாக்கள் கடத்தல்: கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருவர் கைது!

0
12

சுமார் 34,31,400 ரூபாய் பெறுமதியான 64 வெளிநாட்டுப் புறாக்களைச் சட்டவிரோதமாக இலங்கைக்குள் கொண்டுவர முயன்ற இரண்டு உள்ளூர் வியாபாரிகள், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையச் சுங்க அதிகாரிகளால் கடந்த 25ஆம் திகதி இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய செல்லப்பிராணி விற்பனையாளர்கள் (Pet Shop Owners) என சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இத்தாலியில் கொள்வனவு செய்யப்பட்ட இந்தப் புறாக்கள், துபாய் வழியாக எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான EK-652 எனும் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ளன.

விமான நிலையத்தின் வருகைப் பகுதியில், சுங்கப் பிரகடனம் எதுவும் செய்யத் தேவையில்லாத “பச்சை வழி” (Green Channel) ஊடாக இவர்கள் தப்பிச் செல்ல முயன்றபோதே சுங்க அதிகாரிகளின் சோதனையில் சிக்கியுள்ளனர். இவர்கள் கொண்டுவந்த 6 பயணப் பைகளுக்குள் (Luggage), சிறிய இரும்புக்கூடுகளில் அடைக்கப்பட்டு இந்தப் புறாக்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

இலங்கையின் வனவிலங்கு மற்றும் தாவரங்கள் பாதுகாப்புச் சட்டம் மற்றும் விலங்கு தனிமைப்படுத்தல் (Animal Quarantine) விதிகளுக்கு முற்றாக முரணான வகையிலேயே இவர்கள் இந்தப் புறாக்களை நாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.

​​இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கட்டுநாயக்க விமான நிலையச் சுங்க அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைகள் நிறைவடைந்ததும், கைப்பற்றப்பட்ட 64 புறாக்களையும் மீண்டும் இத்தாலிக்கே திருப்பி அனுப்புவதற்காக எமிரேட்ஸ் விமானச் சேவையிடம் ஒப்படைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here