முன்னாள் ராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் உள்ளிட்ட ஐவர் பிணையில் விடுவிப்பு

0
9

சீன நாட்டுப் பிரஜை ஒருவரிடமிருந்து இரண்டு கோடி ரூபாயைப் பறிமுதல் செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் உள்ளிட்ட ஐந்து சந்தேகநபர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் 24 மணித்தியாலங்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், இன்று (27) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இவர்களை, தலா 200 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்ற நீதிபதி பசன் அமரசேன இன்று உத்தரவிட்டார்.

முன்னாள் ராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகனான அனுத ஜனாதித் சமரகோன் பண்டார, அஜித் பிரியந்த, துஷான் ஷியாமல், பிரமிள் குசல் குணதாச மற்றும் வான் குயின் (சீனப் பிரஜை) ஆகிய ஐந்து சந்தேகநபர்களே இவ்வாறு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் குறித்து நீதிமன்றத்தில் சாட்சியம் தெரிவித்த புலனாய்வு அதிகாரிகள், சந்தேகநபர்களின் தொலைபேசி சாதனைப் பதிவுகள், வங்கி அறிக்கைகள் மற்றும் கிரிப்டோகரன்சி மூலம் இதற்கு முன்னர் ஏதேனும் பணப்பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பது குறித்து தொடர்ந்து தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டனர்.

மேலும், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு சந்தேகநபரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளும், குற்றச் செயலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனத்தைக் கைப்பற்றுவதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருவதாகப் புலனாய்வு அதிகாரிகள் நீதிமன்றத்தில் மேலும் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here