மாத்தறை,திஹகொட – லொல்பிட்டிய பகுதியில் உள்ள விகாரையொன்றின் போதிக்கு முன்பாகவுள்ள வேப்ப மரத்தில், இரு வெளிநாட்டவர்கள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக திஹகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விகாரைக்கு வழிபாட்டுக்காக வந்த பிரதேசவாசிகளே இச்சடலங்களைக் கண்டு உடனடியாக திஹகொட பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.
இறந்தவர்கள் 57 வயதுடைய பிரான்ஸ் நாட்டவர் மற்றும் 52 வயதுடைய ஸ்காட்லாந்து நாட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் வெலிகமை, மிதிகம – குருபெபில பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியொன்றில் தங்கியிருந்துள்ளனர். சம்பவத்தன்று காலையில் ஹம்பாந்தோட்டை பகுதிக்குச் செல்வதாகக் கூறிவிட்டே விடுதியிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் இருந்து இரு ஜோடி காலணிகள், ஒரு மோட்டார் சைக்கிள் தலைக்கவசம் மற்றும் ‘ஸ்கூட்டி’ ரக மோட்டார் சைக்கிள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த மோட்டார் சைக்கிளின் இலக்கத்தை வைத்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், அது வெலிகமை பகுதியில் வாடகைக்கு பெறப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்ற போதிலும், இதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. சடலங்கள் மீதான பிரேத பரிசோதனைகள் நடத்தப்படவுள்ளதுடன், மாத்தறை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த குமாரவின் வழிகாட்டலில் திஹகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

