“மக்களின் உரிமைகளையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்க தீவிர எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்” – அபிமானி ஜனஜய கட்சியின் தலைவர் பிரதீப் சார்ல்ஸ் உறுதி!

0
8

இன்றைய அரசாங்கம் ஜனநாயகத்தை நசுக்கி, மக்களின் அடிப்படை உரிமைகளை மீறிச் செயல்படுவதாக அபிமானி ஜனஜய கட்சியின் தலைவர் பிரதீப் சார்ல்ஸ் கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அரசாங்கத்தில் உள்ள சிலர் ஜனநாயகத்தைப் புதைத்துவிட்டு, தங்களுக்குப் பின்னர் வேறு எந்த ஆட்சியும் வராது என்ற இறுமாப்புடன் செயல்படுவதாகத் தெரிவித்த அவர், நாட்டில் 70-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் இயங்கி வரும் நிலையில் ஜனநாயக வழியிலான அரசியல் உரிமைகளை எவராலும் தடுக்க முடியாது என்றார்.

மேலும், கடந்த காலத்தில் தவறுகள் செய்து நாட்டின் வரிப்பணத்தைச் சூறையாடியவர்களைச் சிறையில் அடைப்பதில் தங்களுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்றும், ஆனால் அந்தப் போர்வையில் எதிர்கால அரசியல் ஆற்றல் கொண்ட இளைஞர்களை இலக்கு வைத்துப் பொய் வழக்குகளைப் பதிவு செய்து கைது செய்வதை ஒருபோதும் ஏற்க முடியாது என்றும் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், நாட்டில் இன்று மக்கள் சந்திக்கும் அன்றாடப் பிரச்சினைகளை எடுத்துரைக்கச் சரியான தலைவரோ அல்லது பலமான எதிர்க்கட்சியோ இல்லாத சூழ்நிலையில், மக்களின் குரலாக ஒலித்து அவர்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராட அபிமானி ஜனஜய கட்சி முன்வந்துள்ளதாகத் தெரிவித்தார்.

குறிப்பாக வெற்றிலை, சுருட்டு மற்றும் புகையிலை விற்பனையாளர்களுக்கு எதிராக அரசாங்கமும் பொலிஸாரும் மேற்கொண்ட அச்சுறுத்தல்கள் தொடர்பாக வர்த்தமானியில் உரிய தெளிவு இல்லாமையைச் சுட்டிக்காட்டி நீதிமன்றத்திற்குச் செல்லப் போவதாக எச்சரித்த பிறகே, சிறு வணிகர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைக்கு ஓரளவுக்குத் தீர்வு காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனால் எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் அஞ்சாமல், சிறை தண்டனைகளுக்கு முகம் கொடுத்தாவது நாட்டின் பலமான எதிர்க்கட்சியாக நின்று மக்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்போம் என அவர் உறுதியளித்தார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தொடர்பான சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல் குறித்து ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்த கட்சியின் அமைப்பாளர் ஷம்ஸ் ஃபாரூக், முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ ஆற்றிய சேவைகள் தொடர்பில் தங்களுக்கு மிகுந்த திருப்தி இருப்பதாகத் தெரிவித்தார்.

அவசியமான காலத்தில் கொழும்பு மக்களுக்குச் சுத்தமான சுற்றாடலை உருவாக்கிக் கொடுத்த ஒரு பாதுகாப்புச் செயலாளராகவும், இரு வருட காலம் ஜனாதிபதியாக இருந்து கொடூரமான கொரோனா பெருந்தொற்றை வெற்றிகரமாக எதிர்கொண்டவராகவும் அவர் திகழ்ந்ததாகக் குறிப்பிட்டார்.

சமீபத்தில் ஷான் கணேகொட என்பவரால் கோத்தபாய ராஜபக்ஷவிற்கு மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி அழைப்புச் சம்பவத்தைக் கடுமையாகக் கண்டித்த அவர், ஒரு திருடனும் கொள்ளையனுமே இத்தகைய உரையாடலை மேற்கொண்டுள்ளதாகச் சாடினார்.

கோத்தபாய ராஜபக்ஷ இரண்டு ஓய்வூதியங்களைப் பெறுவதாக ஷான் கணேகொட கேள்வி எழுப்புவதைக் சுட்டிக்காட்டிய அவர், கோத்தபாய நாட்டின் பாதுகாப்புக்கும் வளர்ச்சிக்கும் செய்த சேவைக்கு இரண்டு அல்ல, ஐந்து ஓய்வூதியங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here