ஒவ்வொரு பிள்ளைத் தொடர்பிலும் உணர்வுப்பூர்வமான கோணத்தில் நோக்கும் சமூகச் சூழலொன்றை நாட்டில் உருவாக்குவதற்காக நாம் அனைவரும் ஒன்றுபட்டுப் பணியாற்ற வேண்டும் என்றும், இது தொடர்பில் பெற்றோர் உள்ளிட்ட சமூகத்தின் ஏனைய தரப்பினருக்கு விழிப்புணர்வூட்டுவது அரசியல் அதிகாரத்திற்கு மட்டுமன்றி, ஆரம்பப் பிள்ளைப் பருவக் கல்வித் துறைசார் அதிகாரிகளுக்கும் உரித்தான பொறுப்பாகும் என்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

2026.08.14 ஆம் திகதி இசுருபாய கல்வி அமைச்சில் நடைபெற்ற தேசிய ஆரம்பப் பிள்ளைப் பருவக் கலைத்திட்டக் கட்டமைப்பிற்கு அமைவாக உருவாக்கப்பட்ட ஆசிரியர் வழிகாட்டி மற்றும் செயற்பாடுகள் வழிகாட்டித் தொகுப்பை வெளியிட்டு வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

அனைத்துப் பிள்ளைகளுக்கும் “சரியானதொரு ஆரம்பம்” (Starting Right) எனும் கருப்பொருளின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆரம்பப் பிள்ளைப் பருவக் கல்வி துணை ஆதார வழிகாட்டித் தொகுப்பானது, ஆசிரியர் வழிகாட்டி, முன்மொழியப்பட்ட செயற்பாடுகள் வழிகாட்டி, கற்றல்-கற்பித்தல் சாதனங்களின் கையேடு மற்றும் பிரதான பயிற்றுநர்களுக்கான (Master Material) பயிற்சி பெறல் கையேடு என நான்கு பிரதான துறைகளைக் கொண்டுள்ளது.

தேசிய ஆரம்பப் பிள்ளைப் பருவ அபிவிருத்திக் கலைத்திட்டக் கட்டமைப்பிற்கு அமைவாக ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் ஏனைய பங்குதாரர்களுக்குச் செய்முறைச் செயற்பாடுகளை மேற்கொள்வதற்குத் தேவையான வழிகாட்டலை வழங்குவதற்காகவே இவ்வழிகாட்டிகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிள்ளையினதும் வாழ்வின் ஆரம்பத்திலேயே தரமான கல்வியை வழங்குவதற்கான சரியானதொரு அடித்தளத்தை அமைப்பதே இச்சமூகத் திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.

அத்தோடு, இத்திட்டம் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு ஆகியவற்றின் வழிநடத்தலின் கீழ், தேசிய கல்வியியல் நிறுவனம் உள்ளிட்ட பல நிறுவனங்களின் ஒருங்கிணைப்பில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், இதற்கு UNICEF அமைப்பின் ஒத்துழைப்பும் கிடைத்திருக்கின்றது.

இவ்வழிகாட்டித் தொகுப்பைத் தேசிய கல்வியியல் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடும் நிகழ்வும் பிரதமரின் தலைமையில் நடைபெற்றதுடன், அதனைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பிரதமர்,
“ஆரம்பப் பிள்ளைப் பருவக் கலைத்திட்டக் கட்டமைப்பை அறிமுகப்படுத்தி ஒரு வருடம் நிறைவடைவதற்கு முன்னர், அதன் அடுத்த மிக முக்கியமான கட்டமான ஆசிரியர் வழிகாட்டி மற்றும் முன்மொழியப்பட்ட செயற்பாடுகள் வழிகாட்டித் தொகுப்பை வெளியிட நம்மால் முடிந்திருக்கின்றது. பல்வேறு தடைகள் மற்றும் சவால்களுக்கு மத்தியிலும் இதனை வெற்றிகரமாக முடிப்பதற்குத் தேசிய கல்வியியல் நிறுவனம் மற்றும் ஏனைய நிறுவனங்களின் அதிகாரிகள் காட்டிய அர்ப்பணிப்பை நாம் பாராட்ட வேண்டும்.

ஆரம்பப் பிள்ளைப் பருவக் கல்வியுடனேயே தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கல்விச் சீர்திருத்தங்களை வெற்றிகரமாக அறிமுகப்படுத்துவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டிருக்கின்றன. இவ்வழிகாட்டித் தொகுப்பில் உள்ளடக்கப்பட்டிருப்பது கற்றல் செயல்பாட்டிலான ஒரு மாற்றமாகும். பிள்ளையை மையமாகக் கொண்ட தேடலடிப்படையிலான மற்றும் செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட கல்வி முறையினூடாகப் பிள்ளைகளின் ஆரம்பப் பிள்ளைப் பருவ அபிவிருத்திக்கு நாம் பிரவேசிக்க வேண்டிய விதம் குறித்து இதில் சரியானதொரு விளக்கமளிக்கப்பட்டிருக்கின்றது.

அத்தோடு, ஆரம்பப் பிள்ளைப் பருவக் கல்வியிலிருந்து உயர்கல்வி வரை ஒன்றோடொன்று பொருந்துகின்ற அதே நேரத்தில், வளர்ச்சியடைகின்ற கல்வி முறையொன்றை நாட்டில் நிறுவும் செயற்திட்டத்திலேயே நாம் ஈடுபட்டிருக்கின்றோம். இந்த அடிப்படை ஆரம்பத்தை ஆரம்பப் பிள்ளைப் பருவக் கல்வியினூடாகப் பெற்றுக்கொடுக்க ஆரம்பித்திருக்கின்றோம். அதன் மூலம் வெறுமனே அறிவை மாத்திரம் புகட்டும் கல்வி முறையை விடவும், அறிவைப் பெற்றுக்கொண்டு அந்த அறிவின் மூலம் மேற்கொள்ளக்கூடிய காரியங்கள் எவை என்பதை மதிப்பீடு செய்யக்கூடிய கல்வி முறையொன்றைக் கட்டியெழுப்பவே நாம் முயற்சிக்கின்றோம்.

பல்வேறு எண்ணக்கருக்கள், கொள்கைகள், நூல்கள் மற்றும் கலைத்திட்டக் கட்டமைப்புகள் போன்றவற்றை உருவாக்குவதற்கு எடுக்கும் முயற்சிக்கு நிகரான முயற்சியை, அவற்றை நடைமுறைப்படுத்துவதில் நாம் எடுத்துக்கொள்வதில்லை என்ற ஒரு சம்பிரதாயம் நமது நாட்டில் இருந்து வருகின்றது. இருப்பினும் இவ்வழிகாட்டியை நடைமுறைப்படுத்தும்போது நீங்கள் அவ்வாறு இருக்கக் கூடாது. இத்திட்டத்தை நாடு தழுவிய ரீதியில் நடைமுறைப்படுத்தும்போது சரியான முறையில் பின்தொடர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் கண்காணிப்பதற்குமான பொறுப்பு அனைத்து மாகாணக் கல்வி அதிகாரிகளுக்கும் உரித்தாகின்றது. அதேபோல், இக்கற்பித்தல் முறையின் மாற்றம் தொடர்பில் நாம் ஆசிரியர்களுக்குப் பயிற்சியளிப்பதைப் போலவே, ஆரம்பப் பிள்ளைப் பருவக் கல்வியைப் பிள்ளைகளுக்குப் பெற்றுக்கொடுக்க வேண்டிய விதம் குறித்துப் பெற்றோருக்கு விழிப்புணர்வூட்டுவதிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
பிள்ளைகளுக்குச் சிறந்ததைக் கொடுக்க வேண்டும், அவர்களைப் பாதுகாக்க வேண்டும், அவர்கள் அன்பைப் பெற வேண்டும் எனும் கருத்துப்படிமங்களை நாம் அனைவரும் எந்த அளவு நம்பிய போதிலும், பிள்ளைகளின் தேவைகளைப் பொருட்படுத்தாது, அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாது, உணர்வற்ற விதத்தில் சிறு பிள்ளைகளுடன் எப்படி நடந்துகொள்ள முடிகின்றது என்பது குறித்தும் நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். அத்தகைய சூழ்நிலைகளை உருவாக்கும் காரணிகளைக் கண்டறிந்து அவற்றை மாற்றுவதற்கு நாம் தலையிட வேண்டும்.
அத்தோடு, பிள்ளைகளைப் பராமரித்து, அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடிய இடத்திற்குப் பாதுகாப்பாளர்களின் வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதற்குப் பொருத்தமான சூழலை ஏற்படுத்துவதும் நாம் ஏற்க வேண்டிய பொறுப்பாகும்” எனப் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் திருமதி சரோஜா சாவித்திரி போல்ராஜ்,

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு என்ற ரீதியில் 2026 ஆம் ஆண்டை அனைத்து விதத்திலும் ஆரம்பப் பிள்ளைப் பருவத் துறையை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற திடசங்கற்பத்துடன் ஆரம்பித்ததாகக் குறிப்பிட்டார். மேலும், இவ்வழிகாட்டித் தொகுப்பானது நமது நாட்டின் எதிர்கால சந்ததியினருக்காகக் கட்டியெழுப்பப்பட்ட பலமானதொரு அடித்தளமாகும் என்றும், 2027 ஆம் ஆண்டில் ஒரே தேசியக் கொள்கையின் கீழ் தொழிற்படும், நம்பிக்கையுடன் தனது பிள்ளையைச் சேர்க்கக்கூடிய முன்பள்ளி முறைமையொன்றை நாடு தழுவிய ரீதியில் நிறுவுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர் வைத்தியர் நாமல் சுதர்ஷன, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவேவ, தேசிய கல்வியியல் நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் சிரேஷ்ட பேராசிரியர் ஓ. ஜி. தயாரத்ன பண்டார உள்ளிட்ட மேலதிக செயலாளர்கள், மாகாணக் கல்வி அதிகாரிகள் மற்றும் UNICEF அமைப்பின் பிரதிநிதிகள் குழுவினரும் கலந்துகொண்டனர்.


