நிறுவனங்களின் ‘பயனளிக்கும் உரிமையாளர்’ தகவல்களை இதுவரை சமர்ப்பிக்காத நிறுவனங்கள், வரும் செப்டம்பர் 30ஆம் திகதிக்கு முன்னர் அவற்றை சமர்ப்பிக்குமாறு கம்பனிகள் பதிவாளர் திணைக்களம் தீவிரமாக அறிவுறுத்தியுள்ளது.
2025ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க கம்பனிகள் திருத்தச் சட்டத்தின் 130H(1) பிரிவின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.
2007ஆம் ஆண்டின் 07ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட அனைத்து நிறுவனங்களும், தங்களின் பயனளிக்கும் உரிமையாளர்களின் விவரங்களை பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில் கம்பனிகள் பதிவாளரிடம் ஒப்படைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இத்தகவல்களை சமர்ப்பிக்கத் தவறும் நிறுவனங்களுக்கு நிர்வாக அபராதங்கள் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், சட்ட விதிகளுக்கு அமைய செயற்படத் தவறும் நிறுவனங்களுக்கு 10 இலட்சம் ரூபாவிற்கு மிகாமலிருந்த அபராதம், 10 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை அல்லது இரண்டு தண்டனைகளும் சேர்த்து விதிக்கப்படலாம் என கம்பனிகள் பதிவாளர் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
