நாமல் ராஜபக்‌ஷவின் கைது சட்டவிரோதமானது: அடக்குமுறைக்கு எதிராக செப்டம்பர் 12இல் அநுராதபுர மேடையில் ஏறுவேன் – உதய கம்மன்பில

0
8

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்தபோது பெறப்பட்டதாகக் கூறப்படும் கமிஷன் பணத்தில், 8 இலட்சம் அமெரிக்க டொலர்களை நாமல் ராஜபக்‌ஷ பெற்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில் தற்போதைய அரசாங்கத்தினால் அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை முற்றிலும் அநீதியானது மற்றும் சட்டவிரோதமானது என பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 5 அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், இக்கைது அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை எனக் குற்றம் சாட்டினார்.
எயார்பஸ் நிறுவனத்திடமிருந்து பிரியங்கா விஜேநாயக்க கமிஷன் பெற்றதற்கும், அதிலிருந்து நிமல் பெரேராவுக்கு பணம் வழங்கப்பட்டதற்கும் சான்றுகள் உள்ள போதிலும், நிமல் பெரேரா அந்தப் பணத்தை நாமல் ராஜபக்‌ஷவின் மேசையில் வைத்துவிட்டு வந்ததாகக் கூறிய வாய்மொழி வாக்குமூலத்தைத் தவிர வேறு எந்தவொரு உறுதியான ஆதாரங்களும் விசாரணையாளர்களிடம் இல்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

கமிஷன் பணத்தைப் பெற்றதாகக் ஒப்புக்கொண்ட நிமல் பெரேராவைக் கைது செய்யாமல், அவருடைய கூற்றை மட்டும் அடிப்படையாகக் கொண்டு நாமல் ராஜபக்‌ஷவைக் கைது செய்திருப்பது மிக அபாயகரமான அடக்குமுறையின் அறிகுறியாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
உகாண்டாவில் டொலர் பதுக்கி வைக்கப்பட்டதாகக் கூறப்பட்டமை, விண்வெளிக்கு ராக்கெட் ஏவப்பட்டதாகக் கூறப்பட்டமை, தங்கக் குதிரை பரிசளிக்கப்பட்டதாகக் கூறப்பட்டமை மற்றும் 19 லம்போகினி கார்கள் இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்பட்டமை போன்ற போலிப் பிரச்சாரங்களின் வரிசையிலேயே இந்த 8 இலட்சம் டொலர் குற்றச்சாட்டையும் பார்க்க வேண்டியுள்ளது என்றும் கம்மன்பில தெரிவித்தார்.

போதிய ஆதாரங்களின்றி ஒருவரின் வாய்மொழி கூற்றை மட்டும் வைத்துக்கொண்டு கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்தால், நாட்டின் 22 மில்லியன் மக்களும், ஏன் பிரதமரும் கூட பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்றும் அவர் எச்சரித்தார்.
மேலும், வரும் செப்டம்பர் 12ஆம் திகதி அநுராதபுரத்தில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரம்மாண்டப் பேரணியை சீர்குலைக்கும் நோக்கிலேயே இக்கைது இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்த அவர், இந்த அநீதியான அரசாங்க அடக்குமுறைக்கு எதிராகவும், சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதற்காகவும் செப்டம்பர் 12ஆம் திகதி அநுராதபுர பேரணியில் சிறப்பு உரையாற்றவுள்ளதாகக் கூறினார். இது அரசியல் கட்சிகளுக்கு இடையிலான பிரச்சினை அல்ல, மாறாகப் பிரஜைகளின் பாதுகாப்புச் சார்ந்த பிரச்சினை என்பதால், நீதியை விரும்பும் அனைத்துப் பொதுமக்களையும் அநுராதபுர பேரணியில் கலந்து கொள்ளுமாறு அவர் அழைப்பு விடுத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here