நுகர்வோர் விவகார ஆணையம் , நேற்று நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் உள்ள பேருந்து நிலையங்கள், போக்குவரத்து மையங்கள் மற்றும் முக்கிய நீண்ட தூர பேருந்து நிலையங்களுக்கு அருகிலுள்ள வியாபார நிலையங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகளைக் குறிவைத்து 112 சிறப்பு அவசர சோதனைகளை நடத்தியது.
பொதுமக்களும் பயணிகளும் தொடர்ந்து கூடும் போக்குவரத்து மையங்களுக்கு அருகில் நிகழும் நியாயமற்ற வர்த்தக முறைகேடுகளிலிருந்து நுகர்வோரைப் பாதுகாப்பதே இந்த சிறப்பு நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என்று நுகர்வோர் விவகார ஆணையம் கூறியது.
உற்பத்தியாளரால் குறிப்பிடப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலையில் குளிர்பானங்கள், சிற்றுண்டிகள் மற்றும் பொட்டலமிடப்பட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்தல், பேக்கரி பொருட்கள், பிற உணவுப் பொருட்கள் மற்றும் பொருட்களின் விலைகளை நுகர்வோர் தெளிவாகப் பார்க்கும் வகையில் காட்சிப்படுத்தத் தவறுதல், பொட்டலமிடப்பட்ட பொருட்களில் உற்பத்தி திகதி, காலாவதி திகதி, தொகுதி எண், உற்பத்தியாளரின் பெயர் மற்றும் முகவரி உள்ளிட்ட அத்தியாவசிய தகவல்களைக் குறிப்பிடத் தவறுதல், மற்றும் காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனைக்குக் காட்சிப்படுத்துதல் ஆகியவை இந்த சோதனைகளின் போது கண்டறியப்பட்டன என்று நுகர்வோர் விவகார ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்தக் குற்றங்களைச் செய்த வியாபார நிலையங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகள் மீது நுகர்வோர் விவகார ஆணையச் சட்டத்தின் விதிகளின் கீழ் சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் வழக்குகள் பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று ஆணையம் தெரிவித்துள்ளது.
பயணிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்யும் மற்றும் தரமற்ற உணவுப் பொருட்களை வழங்கும் வியாபாரிகள் மீது, அவர்களின் தகுதி பேதமின்றி சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும்.

