தொழில் முயற்சியாளர்களை கௌரவித்த இரண்டாவது பிரீமியர் பிராந்திய சிறப்பு விருதுகள் 2026 விழா யாழ்ப்பாணத்தில் சிறப்பாக நடைபெற்றது

0
16

சிறிய, நடுத்தர மற்றும் வளர்ந்து வரும் தொழில்முயற்சியாளர்களின் சாதனைகளை அங்கீகரித்து கௌரவிக்கும் நோக்கில், இலங்கை – கனடா வர்த்தக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் “2nd Premier Regional Excellence Awards 2026” விருது வழங்கும் விழா கடந்த 19.06.2026 வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் ஜே ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றினார். தனது உரையில், பிராந்திய மட்டத்தில் உருவாகும் தொழில்முயற்சியாளர்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகின்றனர் என்றும், அவர்களின் புதுமைத் திறன்கள் மற்றும் தொழில் முயற்சிகளை ஊக்குவிப்பது நிலையான மற்றும் உள்ளடக்கிய அபிவிருத்திக்கான அடித்தளமாக அமையும் என்றும் குறிப்பிட்டார்.

 

நிகழ்வில் உரையாற்றிய இலங்கை – கனடா வர்த்தக சம்மேளனத்தின் தலைவரும், இலங்கை – கனடா வணிக சபையின் தலைவருமான எம்.எச்.ஏ. முஹம்மட் ஹமிஸ், பிராந்திய தொழில்முயற்சியாளர்களை வலுப்படுத்துதல், புதுமைகளை ஊக்குவித்தல் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் (MSMEs) வளர்ச்சியடைய தேவையான சூழலை உருவாக்குதல் ஆகியவை நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் சமூக வளர்ச்சிக்கும் அத்தியாவசியமானவை என வலியுறுத்தினார். மேலும், தொழில்முயற்சியாளர்களின் அர்ப்பணிப்பு, கடின உழைப்பு மற்றும் சாதனைகளை கௌரவிக்கும் வகையில் இவ்விருது வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த விழாவில் இலங்கை – கனடா வர்த்தக சம்மேளனத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், தொழில்முயற்சியாளர்கள், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டச் செயலர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 50-க்கும் மேற்பட்ட தொழில்முயற்சியாளர்கள் இந்நிகழ்வில் விருதுகளால் கௌரவிக்கப்பட்டனர். நீண்டகால பங்களிப்புகளைப் பாராட்டும் வகையில் திரு. இளங்கோ இரத்தினசபாபதி மற்றும் திருமதி கலா அமிர்ததங்கம் ஆகியோருக்கு விசேட கௌரவ விருதுகளும் வழங்கப்பட்டன.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தொழில்முனைவுத் திறனையும் சாதனைகளையும் வெளிக்கொணரும் இந்த விருது வழங்கும் நிகழ்வு, பிராந்திய பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு மட்டுமல்லாது, புதிய தொழில்முயற்சியாளர்களுக்கு ஊக்கமும் நம்பிக்கையும் அளிக்கும் ஒரு முக்கிய மேடையாக அமைந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here