திருகோணமலை கன்னியா பிள்ளையார் கோவில் வளாகத்தில் கட்டுமானப் பணிகளுக்கு மேல் நீதிமன்றம் அதிரடி இடைக்காலத் தடை

0
8

வரலாற்றுச் சிறப்புமிக்க திருகோணமலை கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் அமைந்திருந்த பிள்ளையார் கோவில் நிலப்பரப்பில், மறு அறிவித்தல் வரும் வரை எவ்விதமான புதிய கட்டுமானப் பணிகளையும் முன்னெடுக்கக் கூடாது என திருகோணமலை மேல் நீதிமன்றம் தொல்பொருள் திணைக்களத்திற்கும் திருகோணமலை மாவட்டச் செயலாளருக்கும் அதிரடி இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கன்னியா பிள்ளையார் கோவில் அமைந்திருந்த வளாகத்தில் தொல்பொருள் திணைக்களத்தின் அனுசரணையுடன் புதிய கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தமைக்கு எதிராகச் சட்டத்தரணி பிரஷாந்தினி உதயகுமார் அவர்களினால் திருகோணமலை மேல் நீதிமன்றில் அவசர நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம். ஏ. சுமந்திரன் மேல் நீதிமன்றில் ஆஜராகி, அப்பகுதியின் வரலாற்று மற்றும் பாரம்பரிய முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டி தொல்பொருள் திணைக்களத்தினதும் மாவட்டச் செயலகத்தினதும் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு எதிராக வலுவான சட்டவாதங்களை முன்வைத்தார்.

இரு தரப்பு வாதங்களையும் பரிசீலித்த திருகோணமலை மேல் நீதிமன்றம், தொல்பொருள் திணைக்களமும் மாவட்டச் செயலாளரும் குறித்த பகுதியில் மேற்கொண்டு வரும் அல்லது திட்டமிட்டுள்ள அனைத்துக் கட்டுமானப் பணிகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என உத்தரவிட்டதுடன், நீதிமன்றத்தின் மறு அறிவித்தல் வரை அப்பகுதியில் எவ்வித மாற்றங்களையோ கட்டுமானங்களையோ செய்யக் கூடாது எனவும் கட்டளையிட்டது.

கன்னியா பிள்ளையார் கோவில் பகுதி தமிழ் மக்களின் நீண்டகால ஆன்மீக மற்றும் பண்பாட்டு உரிமை சார்ந்த இடமாக விளங்குவதால், அங்கு மேற்கொள்ளப்பட்டு வந்த கட்டுமானங்கள் தொடர்பில் மக்கள் மத்தியிலும் அரசியல் பிரதிநிதிகள் மத்தியிலும் பெருமளவு அதிருப்தி நிலவி வந்த நிலையில், இந்நீதிமன்ற உத்தரவு மக்களின் வரலாற்று உரிமைகளைப் பாதுகாப்பதற்கான மிக முக்கியமான சட்டப் போராட்ட வெற்றியாகப் பார்க்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here