தரமற்ற நிலக்கரி இறக்குமதியால் நாட்டுக்கு ரூ. 20 பில்லியன் இழப்பு: எச்.எம். மரிக்கார் எம்.பி. குற்றச்சாட்டு

0
2

தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்ட விவகாரத்தில் இடம்பெற்ற ஊழல் காரணமாக நாட்டுக்கு சுமார் 20 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.

எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்:
“தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் பதவி இழந்த முன்னாள் அமைச்சர் குமார ஜயகொடியை வரும் ஜனவரி மாதத்திற்குள் மீண்டும் அமைச்சராக்கும் முயற்சி அரசாங்கத்திற்குள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஜனாதிபதியின் நண்பரான அமைச்சர் அனுர கருணாத்திலக்க, இந்த நிலக்கரி ஊழலால் ஏற்பட்ட நஷ்டம் 15.68 பில்லியன் ரூபா என்றும், ‘பிணையப் பிணை’ (Performance Bond) மூலம் 16.9 பில்லியன் ரூபா கையில் உள்ளதால் அந்த நஷ்டத்தை ஈடுசெய்ய முடியும் என்றும் கூறி குமார ஜயகொடியை காப்பாற்ற முயற்சிக்கிறார். இது முற்றிலும் பொய்யான கூற்றாகும்.

அடிப்படை வசதிகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை தற்போது கிடைத்துள்ளது. மின்சக்தி அமைச்சின் மேலதிக செயலாளர் தலைமையிலான குழு தயாரித்த இந்த அறிக்கையை முழுமையாகப் படிக்காமல் அமைச்சர் இந்த பொய் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

தரமற்ற நிலக்கரி காரணமாக தேவையான 300 மெகாவாட் மின்சாரத்தைப் பெற முடியாமல் போனதால், மேலதிக மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய 8.572 பில்லியன் ரூபா செலவாகியுள்ளது. 300 மெகாவாட் உற்பத்தி செய்யப்படாததால், கூடுதல் நிலக்கரியைப் பயன்படுத்தியமையால் ஏற்பட்ட இழப்பு 7.099 பில்லியன் ரூபாவாகும். இது தவிர, கூடுதல் பராமரிப்புப் பணிகளுக்காக 80.4 மில்லியன் ரூபாவும், தரமற்ற நிலக்கரியால் சேர்ந்த சாம்பலைக் கட்டுப்படுத்த 13.1 மில்லியன் ரூபாவும் செலவிடப்பட்டுள்ளது.

ஒப்பந்தம் செய்யப்பட்ட 25 கப்பல்களில் 19 கப்பல்கள் மட்டுமே நாட்டிற்கு வந்தடைந்தன. எஞ்சிய 6 கப்பல்களுக்குப் பதிலாக அவசர கொள்முதல் அடிப்படையில் கொண்டுவரப்பட்ட 5 கப்பல்களுக்கு, சந்தை விலையை விட 2,284 மில்லியன் ரூபா அதிகமாகச் செலுத்த வேண்டியேற்பட்டது. மேலும், அவசர கொள்முதலில் வந்த ஒரு கப்பல் 5 நாட்கள் தாமதமானதால், மேலதிக மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய 402.8 மில்லியன் ரூபா செலவாகியுள்ளது.

இந்திய பரிசோதனை அறிக்கைகள் சந்தேகத்திற்குரியதாக இருந்ததால், அவுஸ்திரேலியாவின் ‘பியூரோ வேரித்தாஸ்’ (Bureau Veritas) நிறுவனம் மூலம் 19 கப்பல்களையும் பரிசோதிக்க ஒரு கப்பலுக்கு 1.4 மில்லியன் ரூபா வீதம், மொத்தம் 26.6 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

இதன்படி, அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள நேரடி இழப்பு 18,393 மில்லியன் (18.39 பில்லியன்) ரூபாவாகும். இதில் சேர்க்கப்படாத நீர்மின் உற்பத்திச் செலவு மற்றும் டீசலுக்கு அரசாங்கம் வழங்கிய மானிய இழப்புகளும் இதனுடன் சேர வேண்டும். உதாரணமாக, ஏப்ரல் மாதத்தில் ஒரு லீட்டர் டீசலின் செலவு 700 ரூபாவாக இருந்தபோது, அரசாங்கமும் தாதுயெண்ணெய் கூட்டுத்தாபனமும் லீட்டருக்கு 350 ரூபா நஷ்டத்தைச் சுமந்தன.
எனவே, இந்த நிலக்கரி ஊழலின் மொத்த இழப்பு சுமார் 20 பில்லியன் ரூபாவாகும். அரசாங்கம் கூறுவது போல் பிணையப் பிணை மற்றும் அபராதங்கள் மூலம் 16.9 பில்லியன் ரூபா திரும்பக் கிடைத்தாலும், டீசல் மானிய நஷ்டத்தைக் கணக்கிடாமலேயே மீட்டெடுக்க முடியாத இழப்பு 2 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமாகும்.

கொள்முதல் விதிமுறைகளை மாற்றி, தரமற்ற நிலக்கரியைக் கொண்டுவர வழிவகுத்தது குமார ஜயகொடியின் காலத்திலாகும். எனவே இந்த ஊழலின் பொறுப்பிலிருந்து அவர் தப்பிக்க முடியாது. இது தொடர்பில் லஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் குற்றப்புலனாய்வுத் துறை (CID) என்பன விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளன.

இந்த உத்தியோகபூர்வ அறிக்கை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு 225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கி வைக்கப்படும். அதன் பின்னர் இது ஜனாதிபதி ஆணைக்குழு அல்லது உரிய விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும்” என அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here