நாட்டில் நிலவும் டெங்கு தொற்று அபாயத்தைக் கட்டுப்படுத்துவதற்காக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை நடைமுறைப்படுத்துவதன் தற்போதைய முன்னேற்றம் குறித்த விசேட கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் நேற்று (ஜூலை 03) பிற்பகல் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

கடந்த ஜூன் 23, 2026 அன்று வெளியிடப்பட்ட டெங்கு ஒழிப்புத் திட்ட சுற்றறிக்கைக்கு அமைய, அனைத்து அரச நிறுவனங்களும் இதுவரை முன்னெடுத்துள்ள திட்டங்களின் முன்னேற்றம், தற்போதைய டெங்கு நிலைமையைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
டெங்கு நோய் தீவிரமாகப் பரவும் அதிஅபாய வலயங்களில் தொற்றைத் தடுப்பதற்காக, அனைத்து அரச நிறுவனங்களும் ஒன்றிணைந்து செயல்படக்கூடிய நிலையான தீர்வுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அதிக ஆபத்துள்ள பகுதிகளில் டெங்கு ஒழிப்புப் புகையடிக்கும் (Fogging) நடவடிக்கைகளை மேலும் அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

டெங்கு கட்டுப்பாட்டு செயல்பாட்டு அறையிலிருந்து (Dengu Control Operations Room) பெறப்படும் தகவல்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் இங்கு பரிசீலிக்கப்பட்டது.
துல்லியமான தரவுகளை அடிப்படையாகக் கொண்டு, அதிஅபாய வலயங்களை இயல்பு நிலைக்கு மீட்கும் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டியதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது.
“அரசாங்கத்தால் மட்டும் தனியாகச் செய்ய முடியாது” – ஜனாதிபதியின் செயலாளர்
இக்கலந்துரையாடலில் சுட்டிக்காட்டிய ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, டெங்கு அதிஅபாயப் பகுதிகளை அதிலிருந்து விடுவிக்க வேண்டுமானால், பாரம்பரிய முறைகளில் இருந்து விடுபட்டு புதிய நவீன வழிமுறைகளின் ஊடாக திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டார். மேலும்,
“டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதை அரசாங்கத்தால் மட்டும் தனியாகச் செய்ய முடியாது. அதற்காகப் பொதுமக்களுக்கும் மிகப்பெரிய பொறுப்பு உள்ளது.”
என அவர் வலியுறுத்தினார். அத்துடன், பொது சுகாதாரப் பரிசோதகர்களின் (PHI) பங்களிப்பை அதிகரித்து, வீடுகள் சார்ந்த தூய்மைப்படுத்தும் பணிகளைத் தொடர்ச்சியாக முன்னெடுப்பது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த உயர்மட்டச் சந்திப்பில் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க, தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர மற்றும் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ செயலகத்தின் அதிகாரிகள், சுகாதாரத் துறை பிரதானிகள், பாதுகாப்புத் துறை தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


