கோதுமை மாவு விலை உயர்வு: தேசிய நுகர்வோர் முன்னணி கடும் கண்டனம்

0
8

கோதுமை மாவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை தன்னிச்சையாக உயர்த்தப்பட்டுள்ளமை குறித்து தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் ஊடகங்களுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

அண்மையில் கோதுமை மாவின் விலை கிலோவுக்கு 10 முதல் 12 ரூபாய் வரை உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது மேலும் 17 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, சந்தையில் ஒரு கிலோ பிரீமா கோதுமை மாவு 205 ரூபாய் வரையிலும், பாக்கெட் செய்யப்பட்ட கோதுமை மாவு 250 முதல் 260 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் 22ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறித்த விவாதங்கள் நடைபெற்று வரும் வேளையில், மக்களின் கவனத்தை திசைதிருப்பி நிறுவனங்கள் ரகசியமாக இத்தகைய விலை உயர்வை மேற்கொண்டு வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.

இந்தத் திடீர் விலை உயர்வு குறித்து நுகர்வோர் விவகார அதிகாரசபையோ அல்லது வணிக அமைச்சரோ எந்தவித முன்னறிவிப்பையும் தெளிவுபடுத்தலையும் மக்களுக்கு வழங்கவில்லை என அவர் தெரிவித்தார்.

இந்த விலை அதிகரிப்பால் குறிப்பாக தோட்டத் தொழிலாளர்கள், கிராமப்புற மக்கள் மற்றும் அன்றாடக் கூலித் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

இவர்கள் தங்களின் அன்றாட உணவிற்காக ரொட்டி மற்றும் கோதுமை மாவு சார்ந்த உணவுகளையே அதிகம் நம்பியுள்ளனர். மேலும், கோதுமை மாவின் விலை உயர்வால் பாண், ரொட்டி, கொத்து, பராட்டா மற்றும் பிஸ்கட் உள்ளிட்ட அனைத்து வெேகரி பொருட்களின் விலைகளும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், நுகர்வோரின் நுகர்வுத் திறனும் வெகுவாகக் குறையும் என அவர் எச்சரித்தார்.

எனவே, இந்த விலை உயர்வுக்கான உண்மையான காரணம் என்ன என்பதை வணிக அமைச்சர் உடனடியாக நாட்டிற்கு வெளிப்படுத்த வேண்டும் என தேசிய நுகர்வோர் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

புதிய வரிகள் ஏதேனும் விதிக்கப்பட்டுள்ளதா அல்லது தனியார் நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டுவதற்காக தன்னிச்சையாக விலையை உயர்த்தியுள்ளனவா என்பதை அரசாங்கம் வெளிப்படையாகக் கூற வேண்டும் எனவும் அசேல சம்பத் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here