கொழும்பு அளுத்மாவத்தை ஆனந்த ஐயப்பன் தேவஸ்தான 23 ஆம் ஆண்டு திருவிழா 24.07.2026 முதல் 02.08.2026 வரை…

0
28
  1. கொழும்பு 15 அளுத்மாவத்தை வீதி, அகில இலங்கை ஆனந்த ஐயப்ப தேவஸ்தான 23 ஆம் ஆண்டு திருவிழா 24.07.2026 முதல் 02.08.2026 வரை நடைபெறவுள்ளது.

24.07.2026 ஆடி மாதம் 8 ஆம் நாள் வெள்ளிக்கிழமை காலை 5:45 மணிக்கு மகா கணபதி ஹோமம், அஷ்டபிஷேகம் மாலை 5:30 மணிக்கு ஆச்சர்ய வரணம் என்பவற்றுடன் கொடியேற்றம் நடைபெற்று தொடர்ந்து திருவிழாக்கள் நடைபெறுவதோடு 02.08.2026 ஞாயிற்றுக்கிழமை தீர்த்தவாரி(ஆராட்டு) தேர்பவனி இடம்பெறும்.

கொழும்பு அளுத்மாவத்தை வீதியில் அமைந்துள்ள ஆனந்த ஐயப்பன் திருக்கோயில் இலங்கையில் மிகவும் புகழ்பெற்ற ஐயப்பன் ஆலயமாகும். கார்த்திகை மாதம் முதலாம் திகதி “மாலை அணிந்து” இங்கு இருமுடி கட்டி படியேறும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது கேரள மாநிலம் சபரிமலை திருக்கோயில் போன்று 18 படியுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆலயம் கடந்த 24 ஆண்டுகளாக ‘மேல் சாந்தி நம்பூதிரிகளால்’ மிகவும் சிறப்பான வழிபாட்டு ஸ்தலமாகவும் இலங்கை வாழ் பக்தர்களின் முக்கியமான ஆலயமாகவும் அமைந்துள்ளது.

கார்த்திகை மாதம் விரதமிருந்து வரும் அடியார்களுக்கு அருள்பாலித்து சாஸ்தாவின் புகழ் பாடும் ஒரு ஆலயமாக அமைந்துள்ளது.

சபரிமலையில் நடக்கும் தின பூஜைகள் போல் ‘மேல் சாந்தியால்’ பூஜைகள் நடத்தப்பட்டு அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகின்றது. சனிக்கிழமை நாட்களில் மிக விமரிசையாக மாலை அலங்காரத்துடன் நடைபெறும் படி பூஜை பார்ப்பதற்கு மிகவும் கண்கொள்ளாக் காட்சியாகும் 2019 கொரோனாவை தொடர்ந்து ஆண்டு தோறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலை செல்ல முடியாத பக்தர்கள் ஆலயத்தில் படியேறும் வாய்ப்பு வசதிகளை ஆலயத்தின் அறங்காவலர் ராஜுசிவராமன் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

பிரம்மஸ்ரீ கண்டரு மகேஸ்வரு சபரிமலை தலைமை அதிஉயர் தந்திரி, அவர்களின் ஆன்மீக கிரியைகளுடன் இப் புனித திருத்தலத்திற்கு தென்னிந்திய பாடகர் பத்மஸ்ரீ டொக்டர் கே. ஜே . ஜேசுதாஸ், அமரர்களான பெரி முத்துசாமி, குருநாதர் கனகரட்ணம், ரவீந்திர குமார் மற்றும் அறங்காவலர் ராஜு சிவராமன், நிர்வாக சபை உறுப்பினர்களின் பெரும் முயற்சியால் 5.4.1993 இல் அடிக்கல் நாட்டப்பட்டது.

அதைத்தொடர்ந்து கட்டடக் கலை நிபுணர் ராஜுசிவராமனின் தலைமை முகாமைத்துவத்தின் கீழ் ஸ்தபதி சந்தனகுமாரின் சிற்பக் கலையில் கோயில் நிர்மாணிக்கப்பட்டு 15. 7. 2002ல் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக கிரியா பூஜைகள் யாவும் சபரிமலை அதியுயர் தந்திரி பிரம்மஸ்ரீ கண்டரு மகேஷ்வருவின் தலைமையின் கீழ், மேல் சாந்திகளாலும் தந்திரிக முறைப்படி கேரள செண்டை பஞ்சவாத்தியம் முழங்க பூஜைகள் யாவும் நடைபெற்று ஐயன், ஆனந்த ஐயப்பனாக பிரதிஷ்ட செய்ய திருவருள் பாலித்தது.

அதைத் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் ஆனி மாதம் வருஷாபிஷேக கொடியேற்ற தீர்த்த ஆராட்டு திருவிழா நடைபெற்று வருகிறது.
இந்நிகழ்வுகள் யாவும் சபரிமலை தலைமை தந்திரியின் தலைமையின் கீழ் ஆலய ‘மேல் சாந்திகளால்’ சத்தியமான பொண்ணு 18-ஆம் படி பூஜை மற்றும் அனைத்து பூஜைகளும் கேரள செண்டை பஞ்ச வாத்தியத்துடன் நடைபெற்று வருகிறது.
2011ஆம் ஆண்டில் ஆலயத்தின் கொடி ஸ்தம்பம் புதிதாக புனரமைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இது முன்னர் இருந்ததைவிட 39 அடி உயரமாக புனர் நிர்மாணம் செய்யப்பட்டது. அத்தோடு சத்தியமான பொண்ணு 18ஆம் படியும் புனர்நிர்மாணிக்கப்பட்டது.

இந்த ஆலயம் அமைவதற்கு அறங்காவலர் ராஜசிவராமனுக்கு பக்கத்துணையாக இருந்து இன்றும் செயல்பட்டு வரும் தற்போதைய முக்கிய நிர்வாக சபை உறுப்பினர்களான க.கணேசன் மூர்த்தி, வி. மனோரஞ்சன், சி. ஆனந்தீஷ்வரன், அ.ரமேஷ், சி. தியாகராஜ், அருணாச்சலம் பால்ராஜ் ஆகியோர் தோன்றாத் துணையாக நின்று திருப்பணிகளை செய்து வருகின்றனர்.

ஆலயத்தில் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ஐயப்ப சுவாமியின் காவல் தெய்வங்களான கருப்பண்ண சுவாமி, கடுத்த சாமிக்கு விசேட திரவிய அபிஷேக அலங்கார பூஜை நடைபெறுகிறது. இது அவரை குலதெய்வமாக வழிபடுபவருக்கு மிக முக்கியமான பூஜையாக இருக்கிறது. அதுபோல் நாகராஜ பிரபுவுக்கு அவருடைய ஜென்ம நட்சத்திரமாகிய ஆயில்ய நட்சத்திரத்தில் விசேட பூஜை ஒவ்வொரு மாதமும் நடைபெறுகிறது.

இது நாக தோஷம், திருமணத் தடங்கல், மாங்கல்ய தோஷம், தீராத நோய்கள் உள்ளவர்களுக்கு நிவர்த்தி கிடைத்திருக்கிறது.
கார்த்திகை மாதம் முதலாம் திகதி ஐயப்ப சாமிக்கு விரதம் இருக்கும் சாமிமார்களுக்கு மாலை அணிவிக்கப்படும். அதைத் தொடர்ந்து 60 நாட்கள் விசேட பூஜைகள் பஜனை நடைபெற்ற அன்னதானம் வழங்கப்படுவதை மண்டல பூஜை என்பார்கள். இருமுடி கட்டி நெய் அபிஷேகம் செய்வதற்கு ஐயப்ப விரதமாலை அணிந்த சுவாமிமார்களுக்கு சத்தியமான பொண்ணு 18 ஆம் படி ஏறுவதற்கு மண்டல பூஜை அன்றும், (கார்த்திகை முதல் திகதியிலிருந்து இருந்து 41 ஆம் நாள்) ஜனவரி முதலாம் திகதியும் ஜனவரி 14ஆம் திகதி (மகர ஜோதி) வாய்ப்பு அளிக்கப்படும்.

சபரிமலைக்குப் போக முடியாத ஐயப்ப விரதமாலை அணிந்த சாமிமார்கள் இங்கு சத்தியமான பொண்ணு 18-ம் படி ஏறி நெய் அபிஷேகம் செய்து விரதத்தை பூர்த்தி செய்கிறார்கள். இது இலங்கை வாழ் ஐயப்ப சுவாமிக்கு பக்தர்களுக்கு கிடைத்திருக்கும் பெரிய வரப்பிரசாதமாகும்.
அதைத்தவிர ஆவணி திருவோணம், சித்திரை விசு நாட்களிலும் ஐயப்ப விரதமாலை அணிந்து பக்தர்கள் சபரிமலை செல்கிறார்கள்.

வசதி இல்லாதவர்கள் இங்கு இருமுடிகட்டி சத்தியமான பொண்ணு 18-ம் படி ஏறி நெய் அபிஷேகம் செய்து விரத பூர்த்தி செய்து கொள்கிறார்கள்.
தினமும் காலையில் விநாயகருக்கு கணபதி ஹோமம் அதனைத் தொடர்ந்து ஆனந்த ஐயப்ப சாமிக்கு பஞ்ச திரவிய அபிஷேகம் நடைபெறுகிறது. இதை உபயமாக மெய்யடியார்கள் செய்து வருகிறார்கள். பூஜைகள் யாவும் கேரளா ஆலய மேல்சாந்திகளால் தந்திரிக முறைப்படி நடைபெற்று வருகின்றன.

எச்.எச். விக்ரமசிங்க 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here