கொழும்பிலுள்ள சவூதி தூதரகத்தை முற்றுகையிட்ட அனோஜனின் குடும்பத்தினர்: உயிரைக் காப்பாற்ற அவசர இராஜதந்திர கோரிக்கை

0
8

சவூதி அரேபியாவில் சமூக வலைத்தளப் பதிவு தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜனின் குடும்பத்தினர், அவரது உயிரைப் பாதுகாக்குமாறு கோரி கொழும்பிலுள்ள சவூதி அரேபியத் தூதரகத்திற்குச் சென்று அவசர மனு ஒன்றை கையளித்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை நட்பிட்டிமுனையிலிருந்து வருகை தந்த அனோஜனின் குடும்பத்தினருடன், மக்கள் போராட்ட முன்னணியின் தேசிய செயற்குழு உறுப்பினர் வசந்த முதலிகே மற்றும் பல சமூக செயற்பாட்டாளர்களும் இணைந்து தூதரக அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தொழில் வாய்ப்புக்காக சவூதி அரேபியா சென்று ஒன்பது மாதங்களே ஆனா நிலையில், சமூக வலைத்தளத்தில் இடப்பட்ட மதம் சார்ந்த கருத்து தொடர்பாக அனோஜன் கைது செய்யப்பட்டார்.

ஆரம்பத்தில் சவூதி நீதிமன்றத்தால் அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டிருந்த நிலையில், அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மேன்முறையீட்டின் போது இத்தண்டனை திடீரென மரண தண்டனையாக உயர்த்தப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் இலங்கையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், தூதரக அதிகாரிகளிடம் அனோஜனின் தாயார் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதபடி மனுவைக் கையளித்தனர்.

மனிதநேய அடிப்படையில் அவருக்கு மன்னிப்பு வழங்கி, தாய்நாட்டிற்குப் பாதுகாப்பாகத் திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கண்ணீர்மல்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, நிலைமையின் தீவிரத்தைக் கருத்திற் கொண்டு இலங்கை வெளிவிவகார அமைச்சு மற்றும் ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம் ஆகியவை சவூதி அதிகாரிகளுடன் இராஜதந்திர ரீதியிலான பேச்சுகளை முன்னெடுத்து வருகின்றன.

தீர்ப்பு தொடர்பான உத்தியோகபூர்வ எழுத்துப்பூர்வ ஆவணங்கள் கிடைத்தவுடன், 30 நாட்களுக்குள் சவூதி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்குத் தேவையான சட்ட நடவடிக்கைகளும் ஆயத்தமாக்கப்பட்டு வருகின்றன.

நாட்டின் பல பாகங்களிலும் அனோஜனை விடுவிக்கக் கோரி கவனயீர்ப்புப் போராட்டங்கள் வலுப்பெற்று வரும் பின்னணியில், அரசாங்கம் உடனடியாக உயர்மட்ட இராஜதந்திர தலையீட்டை மேற்கொண்டு அனோஜனின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் எனப் பல்வேறு அரசியல் தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here