கொழும்பு கோட்டைப் பகுதியில் அமைந்துள்ள ‘டிரான்ஸ்வொர்க்ஸ் சதுக்க’ காணிக் கையகப்படுத்தலை விரைவுபடுத்தித் தருமாறு கோரி, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு 70 மில்லியன் ரூபாவை லஞ்சமாக வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், ‘கிரிஷ்’ நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளரான ஜானகி சிறிவர்தன கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட அவர், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவரை எதிர்வரும் ஓக்டோபர் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
கொழும்பு கோட்டைப் பகுதியில் நகர அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான பெறுமதிமிக்க காணியைப் பெற்றுக்கொள்வதற்கும், அங்கு மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்த பிரமாண்ட சொகுசு கட்டட அபிவிருத்தித் திட்டத்திற்கான அனுமதிகளை விரைவாகப் பெற்றுக்கொள்வதற்கும் ஏதுவாக, மூன்று வெவ்வேறான சந்தர்ப்பங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு இந்த 70 மில்லியன் ரூபா பணத் தொகை லஞ்சமாக வழங்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள ஜானகி சிறிவர்தன, இதற்கு முன்னரும் பல்வேறு நிதி மோசடி குற்றச்சாட்டுகள் மற்றும் வர்த்தகப் பிரமுகர் திலினி பிரியமாலியுடன் தொடர்புடைய நிதி சர்ச்சைகளிலும் குற்றஞ்சாட்டப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த லஞ்சக் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினர் மேலும் விரிவான புலனாய்வு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


