கடற்படை முறைகேடு விவகாரம்: யோஷித ராஜபக்ஷ இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை! Video

0
11
  1. Oplus_16908288
  2. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும், முன்னாள் கடற்படை அதிகாரியுமான யோஷித ராஜபக்ஷ, இலங்கை கடற்படையில் இணைந்தமை மற்றும் பிரித்தானிய ராயல் கடற்படை அகாடமியில் பயிற்சி பெற்றமை தொடர்பான முறைகேடுகள் குறித்து இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் (CIABOC) இன்று (17) காலை கைது செய்யப்பட்டார். விசாரணைக்காக ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதை அடுத்து அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, பின்னர் கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதவான், அவரைப் பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்டார்.

கடந்த 2006ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் யோஷித ராஜபக்ஷ இலங்கை கடற்படையில் கெடட் அதிகாரியாக (Cadet Officer) இணைத்துக் கொள்ளப்பட்ட விவகாரத்தில் கடுமையான விதிமுறை மீறல்கள் மற்றும் ஊழல் இடம்பெற்றிருப்பதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. பொதுவாக, கடற்படையில் இப்பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படுவதற்கு விண்ணப்பதாரிகள் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் (A/L) கணிதம் அல்லது அறிவியல் துறையில் சித்தியடைந்திருக்க வேண்டும் என்பது கட்டாய விதியாகும். எனினும், யோஷித ராஜபக்ஷ கலைத்துறையில் (Arts Stream) கல்வி பயின்றவர் என்பதால், அவருக்கு ஆரம்பத்தில் அதற்கான தகைமைகள் இருக்கவில்லை என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இவரை கடற்படையில் இணைத்துக் கொள்ளும் நோக்கிலேயே, ஆட்சேர்ப்புக்கான அடிப்படை தகுதிகள் மற்றும் நிபந்தனைகள் பின்னர் திருத்தப்பட்டு, புதிய விளம்பரங்கள் கோரப்பட்டதாக ஆணைக்குழு குற்றம் சுமத்தியுள்ளது.

அத்துடன், 2006ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அப்போதைய கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட, பிரித்தானியாவின் ராயல் கடற்படை அகாடமிக்கு (Britannia Royal Naval College) யோஷித ராஜபக்ஷவிற்கு அனுமதி வழங்குமாறு கோரி கடிதம் அனுப்பியிருந்ததாக விசாரணைக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. அதற்கு அனுமதி வழங்கிய பிரித்தானிய கடற்படை அகாடமி, இது முழுமையான கல்வித்தொகை (Scholarship) அடிப்படையில் வழங்கப்படமாட்டாது என்றும், இதற்கான பயிற்சிக் கட்டணங்கள் செலுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில், 2007ஆம் ஆண்டு ஜனவரி முதல் சுமார் 18 மாதங்களுக்கும் மேலாக அவர் மேற்கொண்ட இந்த வெளிநாட்டுப் பயிற்சிக்கான முழுச் செலவுகளையும் செலுத்துவதற்கு இலங்கை கடற்படை மற்றும் அரசாங்க நிதியே முறையற்ற வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர் அரச நிதியை முறைகேடு செய்து ஊழலுக்குத் துணை போயுள்ளார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

முன்னதாக, நேற்று (16) இந்த விசாரணைக்கு முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்த போதிலும், மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மற்றொரு வழக்கு காரணமாக அவரால் சமூகமளிக்க முடியவில்லை என ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, இன்று காலை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜராகி வாக்குமூலம் வழங்கிய நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே இரண்டு பணமோசடி வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு, வெளிநாட்டுப் பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ள யோஷித ராஜபக்ஷ, தற்போதைய புதிய வழக்கிலும் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Oplus_16908288
Oplus_16908288

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here