இலங்கை பொலிஸின் 160வது ஆண்டு நிறைவு: விசேட கண்காட்சி மற்றும் மிதிவண்டிப் போட்டி ஏற்பாடு..!

0
5

இலங்கை பொலிஸின் 160வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை இலங்கை பொலிஸ் திணைக்களம் மேற்கொண்டுள்ளதாக உதவிப் பொலிஸ் அத்தியட்சகரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான எஃப். யூ. வூட்லர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பழமையான அரச நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 160வது ஆண்டு நிறைவு பிரதான விழா எதிர்வரும் செப்டம்பர் 3ஆம் திகதி பொலிஸ் களப்படைத் தலைமையகத்தில் கோலாகலமாக நடைபெறவுள்ளது.

இதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 4, 5 மற்றும் 6 ஆகிய திகதிகளில் பொலிஸ் களப்படைத் தலைமையக வளாகத்தில் விசேட கண்காட்சி நடைபெறவுள்ளது.

பொலிஸ் திணைக்களம் பொதுமக்களுக்கு வழங்கி வரும் பல்வேறு சேவைகள் குறித்தும், பொலிஸ் கட்டமைப்பு பற்றியும் பொதுமக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் நேரில் கண்டு அனுபவத்தைப் பெற்றுக்கொள்ளும் வகையில் இக்கண்காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம், குற்றப் பகுப்பாய்வுப் பிரிவு, மோப்ப நாய் பிரிவு, குதிரைப் படைப் பிரிவு மற்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு ஆகியவற்றின் சார்பில் விசேட கண்காட்சிக்கூடங்கள் அமைப்படவுள்ளன.
இதில் ஊடகத் துறையில் ஆர்வமும் திறமையும் கொண்ட இளைஞர், யுவதிகளுக்கு நிபுணத்துவ விரிவுரையாளர்கள் மூலம் பயிற்சிகளையும் வழிகாட்டல்களையும் வழங்க பொலிஸ் ஊடகப் பிரிவு விசேட வேலைத்திட்டம் ஒன்றையும் முன்னெடுக்கவுள்ளது.

இந்த அனுபவங்களைப் பெற்றுக் கொள்வதற்காக, குறிப்பாக செப்டம்பர் 4ஆம் திகதியன்று பாடசாலை மாணவர்களையும் சிறுவர்களையும் வருகை தருமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும், இந்நிகழ்வை முன்னிட்டு 400 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தைக் கொண்ட 3 கட்ட மிதிவண்டிப் போட்டி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்போட்டி இனிவரும் ஆண்டுகளில் “பொலிஸ் மா அதிபர் சவால் கிண்ணம்” என்ற பெயரில் ஆண்டுதோறும் தொடர்ச்சியாக நடத்தப்படவுள்ளது.

நாட்டின் 25 நிர்வாக மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் சுமார் 1,000 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் வழியாகப் பயணிக்கவுள்ள இப்போட்டிக்கு, நாடு முழுவதும் உள்ள மக்கள் பாதுகாப்பு குழுக்களும் கிராம உத்தியோகத்தர்களும் வழங்கி வரும் மகத்தான ஒத்துழைப்புகளுக்கு பொலிஸ் திணைக்களம் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here