இலங்கை இளம் முஸ்லிம் பெண்கள் சங்கம் (YWMA) தனது 40 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, “Our Growing Years” எனும் நினைவு ஆவண நூலை வெளியிடும் சிறப்பு நிகழ்வை அண்மையில் கொழும்பில் சிறப்பாக நடத்தியது.

0
4

YWMA தலைவி திருமதி ஃபவாஸா தாஹாவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சங்க உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், சமூகத் தலைவர்கள், வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு, இலங்கையில் முஸ்லிம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் முன்னேற்றம் மற்றும் வலுவூட்டலுக்காக நான்கு தசாப்தங்களாக மேற்கொள்ளப்பட்ட அர்ப்பணிப்பான சேவையை நினைவு கூர்ந்தனர்.

1986 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இளம் முஸ்லிம் பெண்கள் சங்கம், கடந்த 40 ஆண்டுகளாக மனிதநேய சேவை, கல்வி மேம்பாட்டு, திறன் அபிவிருத்தி, பெண்கள் வலுவூட்டல் மற்றும் சமூக நலப் பணிகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகிறது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தைப் பதிவு செய்ய வெளியிடப்பட்ட “Our Growing Years” நூல், சங்கத்தின் வளர்ச்சி பயணம், முக்கிய சாதனைகள், மைல்கற்கள் மற்றும் அதன் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் உழைத்த பெண்களின் பங்களிப்புகளை விரிவாக எடுத்துரைக்கிறது.

இந்நிகழ்வில் இலங்கைக்கான மலேசிய உயர்ஸ்தானிகர் பத்லி ஹிஷாம் ஆதம் மற்றும் அவரது துணைவியார் பிரதம அதிதியாக கலந்து கொண்டனர். மேலும், பாகிஸ்தான் மற்றும் ஈரானுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் மொஹமட் ஷஹீத் முக்கிய உரையாற்றியது டன், சமூக சேவை, பெண்களின் தலைமைத்துவம் மற்றும் நாட்டின் அபிவிருத்தியில் தன்னார்வ அமைப்புகளின் முக்கிய பங்கு குறித்து கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

சிறப்பு விருந்தினர்களில் சீனத் டிரேடிங் நிறுவனத்தின் தலைவர் ஏ.எச்.எம். மஹீர், கொழும்பு டைம்ஸ் பிரதம ஆசிரியர் மூத்த ஊடகவியலாளருமான மொஹமட் ரசூல்தீன், சட்டத்தரணி ரஷீத் எம். இம்தியாஸ் மற்றும் ஊடக மற்றும் சமூகத் துறைகளைச் சேர்ந்த பல முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, நீண்டகாலமாக YWMA அமைப்பிற்கு சேவை செய்து வரும் உறுப்பினர்கள் கௌரவிக்கப்பட்டனர். சங்கத்தின் நோக்கத்திற்காக அவர்கள் வழங்கிய அர்ப்பணிப்பு மற்றும் மதிப்புமிக்க பங்களிப்புகள் பாராட்டப்பட்டன. 40 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் கேக் வெட்டும் நிகழ்வும் இடம்பெற்றதுடன், கலாசூரி மொஹிதீன் பேக்கின் மகளான முஈனா பேக் வழங்கிய இசை நிகழ்ச்சி விழாவிற்கு மேலும் சிறப்பூட்டியது.

இந்த முக்கியமான மைல்கல்லை முன்னிட்டு, YWMA கல்வி, சமூக நலன், தலைமைத்துவ வளர்ச்சி மற்றும் சமூக ஈடுபாடு ஆகிய துறைகள் மூலம் முஸ்லிம் பெண்கள் மற்றும் குழந்தைகளை தொடர்ந்து வலுவூட்டும் தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியது. மேலும், சேவை, இரக்கம் மற்றும் சமூக முன்னேற்றம் என்ற தனது நீண்ட கால பாரம்பரியத்தை எதிர்கால தலைமுறைகளுக்கும் கொண்டு செல்ல தொடர்ந்து செயல்படுவதாக சங்கம் உறுதியளித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here