கண்டி
இலங்கை அரசியலமைப்பின் 6ஆம் அத்தியாயத்தில் உள்ள இலவச சுகாதாரம், கல்வி, வாழ்வாதாரம் மற்றும் சிறுவர்-பெண்கள் உரிமைகள் போன்றவற்றை, நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தக்கூடிய வகையிலான 3ஆம் அத்தியாயத்தின் அடிப்படை உரிமைகள் பிரிவினுள் உள்ளடக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி இதனை ஏற்கனவே கொள்கை ரீதியான தீர்மானமாக எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஹுஸ்ம (மூச்சு) திட்டத்தின் 77ஆவது கட்டமாக, கண்டி மாவட்ட ஐக்கிய இளைஞர் சக்தியினால் கண்டி தேசிய வைத்தியசாலைக்கு 48 இலட்சம் ரூபா பெறுமதியான ஹீமோ டயாலிசிஸ் (Hemo Dialysis) இயந்திரம் இன்று (21) கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் பிறந்த தினத்தை (ஜூன் 23) முன்னிட்டு இந்த நன்கொடை வழங்கப்பட்டது. அங்கு தொடர்ந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர்:
மக்களுக்கான சேவை: ‘மூச்சு’ திட்டத்திற்காக இதுவரை 2388 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது. வெறும் பேச்சோடு நின்றுவிடாமல், செயலூக்கம் மிக்க அரசியலையே தமது கட்சி முன்னெடுப்பதாக அவர் கூறினார்.
கல்வி மற்றும் சுகாதார மேம்பாடு: இலவசக் கல்வி மற்றும் சுகாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில், இதுவரை 89 பாடசாலைப் பேருந்துகள் (மதிப்பு: 4342 இலட்சம் ரூபா) மற்றும் 386 பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறைகள் (மதிப்பு: 4310 இலட்சம் ரூபா) தங்களால் வழங்கப்பட்டுள்ளன.
உண்மையான முறைமை மாற்றம்:அதிகாரத்தில் இல்லாத போதும் எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு, கட்சி நிதியை சுயவிளம்பரங்களுக்குப் பயன்படுத்தாமல் மக்களின் நலனுக்காகவே செலவிடுவதாகவும், இதுவே உண்மையான ‘முறைமை மாற்றம்’ (System Change) என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்வில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்ரானி கிரியெல்ல உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.


