அரசாங்கத்தின் பொய் பிரச்சாரங்கள் அம்பலமாகின்றன: நாமல் ராஜபக்ச எம்.பி விளாசல்

0
7

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்றைய தினம் பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள், பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து பல முக்கிய விடயங்களைப் பகிர்ந்துகொண்டார்.

செப்டம்பர் 12ஆம் திகதி அநுராதபுரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாவட்டக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், கட்சித் தலைவர்கள் மற்றும் அமைப்பாளர்கள் கிராம மட்டத்தில் மக்களை திரட்டும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

எதிர்க்கட்சியின் வலுவான அரசியல் நகர்வுகளைக் கண்டு அரசாங்கம் பெரும் கலக்கமடைந்துள்ளதாகச் சாடிய அவர், ஜனாதிபதி ஏசி அறைகளை விட்டுவிட்டு இரண்டு வருடங்களின் பின்னர் கிராமங்களுக்குச் செல்ல தீர்மானித்துள்ளதைச் சுட்டிக்காட்டினார்.

கிராமங்களுக்குச் சென்று மீண்டும் பழைய பொய்களைக் கூறாமல், அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் திட்டங்களை அவர் முன்வைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

22வது அரசியலமைப்புத் திருத்தம் அரசாங்கத்தின் தனிப்பட்ட தேவைகளுக்காகவே கொண்டுவரப்படுவதாகக் குற்றம் சுமத்திய நாமல் ராஜபக்ச, நீதி அமைச்சரும் வழக்கறிஞர் சங்கமும் இதற்கு முன் நீதிமன்ற சுதந்திரத்திற்காக குரல் கொடுத்தவர்கள் என்றும், ஆனால் இன்று அவர்கள் கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர் என்றும் கூறினார்.

ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் அமைச்சர்கள் கோபமடைவது அவர்களின் பலவீனத்தையே காட்டுகிறது என அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் அரசாங்கம் மக்களுக்கு பொய் வாக்குறுதிகளை அளித்துள்ளதாகவும், 150 ரூபாய் குறைப்பதாகக் கூறிவிட்டு கமிஷன் தொகையை மட்டுமே குறைத்துள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.

எரிபொருள் விலை வீழ்ச்சியடைந்தாலும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் வேகமாக அதிகரித்து வருவதாகவும், இதனால் சிறு மற்றும் நடுத்தர தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் மீனவ சமூகத்தைப் பாதுகாக்க அரசாங்கம் உடனடியாக முறையான வேலைத்திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

அரசாங்கம் தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் எதிராளிகள் மீது கடுமையான அடக்குமுறையைப் பிரயோகித்து வருவதாகத் தெரிவித்த அவர், அநுராதபுரக் கூட்டத்திற்கு முன்னதாக தம்மைக் கைது செய்ய அரசாங்கம் முயற்சித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றார்.

இருப்பினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒருபோதும் வன்முறை அரசியலில் ஈடுபடாது என்றும், மக்களின் நம்பிக்கையைப் பெற்று நேர்மையான வழியிலேயே அரசியலில் ஈடுபடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இறுதியாக, தங்களது அரசியல் அடையாளத்தையோ அல்லது பாரம்பரிய ஆடைகளையோ அதிகாரத்திற்காக ஒருபோதும் மாற்றிக்கொள்ள மாட்டோம் என நாமல் ராஜபக்ச உறுதியாகத் தெரிவித்தார்.

தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஆடைகளை மாற்றி, வெற்றி பெற்ற பின் பழைய நிலைக்குத் திரும்பும் அரசியல்வாதிகளைப் போல தாம் செயற்படப் போவதில்லை என்றும், அதிகாரத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரே மாதிரியான கொள்கையுடனேயே மக்களுடன் நிற்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here