இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் 7வது மீளாய்வுக்கான அதிகாரி மட்ட அனுமதி: மேலும் $345 மில்லியன் கிடைக்க வழிவகுப்பு..

0
7

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழ், ஏழாவது மீளாய்வை நிறைவு செய்வதற்கான அதிகாரி மட்ட உடன்பாட்டை சர்வதேச நாணய நிதியத்தின் குழுவும் இலங்கை அதிகாரிகளும் எட்டியுள்ளனர்.

இந்த மீளாய்வுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று வாரியம் (Executive Board) ஒப்புதல் அளித்தவுடன், இலங்கைக்கு சுமார் 345 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி வசதியாகக் கிடைக்கும். இதன் மூலம், சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்குக் கிடைக்கும் மொத்த நிதி உதவி 2.7 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கும்.

இது தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த அதிகாரி மட்ட உடன்பாடானது நிறைவேற்று வாரியத்தின் இறுதி ஒப்புதலுக்கு உட்பட்டது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், திட்டத்தின் அளவுருக்களுக்கு அமைவாக நிதி அமைச்சரால் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும், பல்தரப்பு பங்காளிகளின் நிதிப் பங்களிப்புகள் உறுதி செய்யப்படுவதோடு கடன் மறுசீரமைப்பில் போதிய முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளதா என்பதை மதிப்பிடுவதற்கான நிதி உத்தரவாத மீளாய்வு நிறைவு செய்யப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வெளிப்புற பொருளாதார அதிர்ச்சிகளுக்கு மத்தியிலும் இலங்கை பொருளாதார ஸ்திரத்தன்மையை வெளிப்படுத்தியுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது. 2026ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் 4.2% வளர்ச்சியடைந்துள்ளதாகவும், இது தொடர்ச்சியாக வலுவான பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்த 11வது காலாண்டு என்றும் நாணய நிதியம் மேலும் தெரிவித்துள்ளது.

இந்த அனுமதி குறித்து கருத்து தெரிவித்த தொழிற்துறை அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அணில் ஜயந்த, சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை கவனத்திற் கொள்ளும் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட சமர்ப்பிப்பு, உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) உள்ளிட்ட பல்தரப்பு நிறுவனங்கள் ஊடாக நாட்டின் வெளிநாட்டு கையிருப்புகளை அதிகரிப்பதற்கான நிதித் திரட்டல் மற்றும் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

எனவே, 7வது மீளாய்வுக்கான நிறைவேற்று சபையின் அனுமதி நிச்சயமாகக் கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
கடந்த செப்டம்பர் 10 முதல் 23 வரை சர்வதேச நாணய நிதியக் குழு இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின் பின்னர், இந்த 7வது மீளாய்வு தோல்வியடையும் என சில ஊடகங்கள் மக்களை தவறாக வழிநடத்தும் வகையிலான செய்திகளை வெளியிட்டிருந்ததை அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையை மேற்கோள்காட்டிய அமைச்சர், இலங்கை பொருளாதார ஸ்திரத்தன்மையை பேண முடிந்துள்ள போதிலும், மத்திய கிழக்கு போர்ப் பதற்றம், சர்வதேச வர்த்தகக் கொள்கைகள் மற்றும் ‘எல்-நினோ’ காலநிலை மாற்றங்கள் காரணமாக உலக நாடுகள் எதிர்கொள்ளும் சவால்கள் இலங்கையையும் பாதிக்கக்கூடும் எனக் குறிப்பிட்டார்.
இருப்பினும், இத்தகைய வெளிப்புற அதிர்ச்சிகளை எதிர்கொள்ளும் வகையில் தற்போது நாட்டின் பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here