எதிர்காலத் தலைவர்களை உருவாக்கும் கற்றல் சூழலை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்-பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

0
8

கல்வித்துறையில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளின் ஊடாக, சமூக மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய எதிர்காலத் தலைவர்களை உருவாக்கும் கற்றல் சூழலை அமைப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பிரின்ஸ் ஒஃப் வேல்ஸ் மற்றும் பிரின்சஸ் ஒஃப் வேல்ஸ் கல்லூரிகளின் 150 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் முகமாக, 2026.09.14 ஆம் திகதி மொறட்டுவை பிரின்ஸ் ஒஃப் வேல்ஸ் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார்.

 

1876 ஆம் ஆண்டில் சாள்ஸ் ஹென்றி டி சொய்சா அவர்களின் எண்ணக்கருவிற்கு அமைவாக மொறட்டுவைப் பிரதேசத்தில் இவ்விரு கல்லூரிகளும் நிர்மாணிக்கப்பட்டிருப்பதுடன், இன்று கல்வி, விளையாட்டு மற்றும் பாடவிதான இணைச் செயற்பாடுகள் ஆகியவற்றில் பாரிய முன்னேற்றத்தை அடைந்திருக்கின்றன.

இக்கல்லூரிகளின் 150 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் முகமாக வடிவமைக்கப்பட்ட நினைவுத் தபால் முத்திரை, முதல் நாள் கடித உறை மற்றும் சிறப்பு மலர் என்பன இதன்போது பிரதமருக்கு வழங்கி வைக்கப்பட்டன.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்,

“கல்வியினூடாக நாம் எதிர்பார்ப்பது தற்கால சமூகத்தைப் புரிந்துகொண்டு, அச்சமூகத்தைச் சிறந்த பாதையில் வழிநடத்தக்கூடிய எதிர்காலச் சந்ததியினரை உருவாக்குவதேயாகும். அந்தப் பாரிய கடமைக்காகப் புதிய கல்விச் சீர்திருத்தங்களைச் செயற்படுத்திவரும் இந்த மாற்றத்திற்கான தருணத்தில், இத்தகைய பாடசாலைகள் விசேட கடமையொன்றை ஆற்ற வேண்டியுள்ளது.

அதாவது அரசாங்கம் என்ற வகையில் நாம் மனித வளத்தை அபிவிருத்தி செய்வதற்கு முன்னுரிமை அளித்திருக்கின்றோம். அப்பயணத்தில் கல்வி மீது நாம் விசேட கவனத்தைச் செலுத்தியிருக்கின்றோம். நாம் முறைமைக்கு அமைவாகக் கல்விக்காக ஒதுக்கும் தொகையை ஒவ்வொரு வரவுசெலவுத் திட்டத்திலும் அதிகரித்துவருகின்றோம். எனினும், அந்தச் செயன்முறை இலவசக் கல்வியை உருவாக்கியபோது இருந்த தத்துவத்தில் உள்ளடங்கியுள்ள அனைத்துக் கோட்பாடுகளையும் உள்ளடக்கும் வகையில் இடம்பெற வேண்டும். அந்த இலக்குகளை அடைவதற்குத் தேவையான ஒத்துழைப்பு உங்கள் அனைவரிடமிருந்தும் கிடைக்கும் என நாம் எதிர்பார்க்கின்றோம்” எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாநாயக்கார, இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக், பிரின்ஸ் ஒஃப் வேல்ஸ் கல்லூரியின் அதிபர் கப்டன் வசந்த குமார வடுகே, பிரின்சஸ் ஒஃப் வேல்ஸ் கல்லூரியின் அதிபர் திலினி விஜேவீர உள்ளிட்ட அதிகாரிகள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here