ஜனநாயக அரசியல் கட்டமைப்பில் அரச நிறுவனங்களை அரசியல் பழிவாங்கல்களுக்காகப் பயன்படுத்தும் “Institutional Weaponization” என்ற தவறான அரசியல் உத்தியை தற்போதைய அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் தீவிரமாகப் பயன்படுத்தி வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன குற்றம் சாட்டியுள்ளார். கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தொடர்பான சமீபத்திய விவகாரங்கள் மற்றும் நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து கருத்து வெளியிட்ட அவர், அரசியல் எதிராளிகளை முடக்குவதற்கும் அவர்களின் குரலை அடக்குவதற்கும் அரச அதிகாரமும் விசாரணை நிறுவனங்களும் தவறான முறையில் பயன்படுத்தப்படுவதாகச் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி பயணம் செய்யும் போது பாதைகள் மூடப்படுவதில்லை என்ற அரசாங்கத்தின் வாக்குறுதிகள் பொய் என நிரூபிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், பேருவளை மற்றும் புலத்சிங்கள பகுதிகளுக்கு ஜனாதிபதி விஜயம் செய்த போது வீதிகள் மட்டுமன்றி, பேருவளை மீன்பிடித் துறைமுகத்தில் படகுகள் நுழைவது கூட தடைசெய்யப்பட்டதாகக் குறிப்பிட்டதுடன் தேர்தல் காலத்தில் மீனவர்களுக்காக உறுதியளிக்கப்பட்ட புதிய மொபைல் செயலி குறித்த வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும், சமூக ஊடகங்களில் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக விடுக்கப்படும் கொலை அச்சுறுத்தல்கள் மற்றும் போலிப் பிரசாரங்கள் குறித்து பலமுறை முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும் விசாரணை நிறுவனங்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிவித்த அவர், அரசாங்கம் தனக்கு சாதகமான ஒரு சில தரப்பினருக்கு மட்டுமே சட்டத்தை நடைமுறைப்படுத்தி ஏனையோரை புறக்கணிப்பதாகக் குற்றம் சாட்டினார்.
இவ்வாறான அரசியல் பழிவாங்கல்கள் மற்றும் கைதுகளுக்கு பயந்து கட்சியின் அரசியல் பயணத்தை நிறுத்தப்போவதில்லை என்று தெரிவித்த சஞ்சீவ எதிரிமான்ன, கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கையாக அனுராதபுரம் நகர சபை விளையாட்டு மைதானத்தில் பிரமாண்ட மக்கள் பேரணி நடத்த அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளதாகவும், ஜனநாயக ரீதியான அரசியல் களத்தை ஒடுக்குவதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளை பொதுமக்கள் கேள்விக்குட்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

