தேர்வாளர்கள் சுயாதீனமாகச் செயல்பட முழு அனுமதி – ஏரான் விக்கிரமரத்ன & சங்கக்கார அதிரடி!

0
8

இலங்கை கிரிக்கெட் அணியைத் தேர்வு செய்வதில் அமைச்சர்களோ அல்லது கிரிக்கெட் நிர்வாகிகளோ எவ்வித தலையீடும் செய்ய முடியாது என்றும், தேர்வுக்குழு உறுப்பினர்கள் முற்றிலும் சுயாதீனமாகச் செயல்படுவார்கள் என்றும் கிரிக்கெட் மாற்றுக் குழுவின் தலைவர் ஏரான் விக்கிரமரத்ன மற்றும் குழு உறுப்பினர் குமார் சங்கக்கார தெரிவித்தனர்.

சமீபகால அணித் தேர்வுகள் மற்றும் தேர்வுக்குழு உறுப்பினர்களின் அனுபவம் குறித்தும் எழுந்த விமர்சனங்களைத் தொடர்ந்து, கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவர்கள் இதனைத் தெரிவித்தனர்.

“விளையாட்டுத்துறை அமைச்சரோ, நாங்களோ அணித் தேர்வில் தலையிட முடியாது. கடந்த காலத்தில் விமான நிலையத்திலிருந்து வீரர் திருப்பி அனுப்பப்பட்ட சம்பவங்கள் வரை அரசியல் தலையீடுகள் நடந்துள்ளன. இனி அதற்கு இடமில்லை” என ஏரான் விக்கிரமரத்ன தெளிவுபடுத்தினார்.

“தேர்வாளர்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டாலும், அவர்கள் தலைமைப் பயிற்சியாளர் கேரி கர்ஸ்டன் மற்றும் அணித் தலைவர்களுடன் சரியான முறையில் கருத்துகளைப் பரிமாறிக்கொள்ள வேண்டும்” என சங்கக்கார தெரிவித்தார்.

இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்ட பிறகு, தேர்வாளர்கள் ஊடகங்களைச் சந்தித்துத் தமது முடிவுகள் குறித்த கேள்விகளுக்குப் பதிலளிப்பார்கள் என சங்கக்கார கூறினார்.

தனியார் கிரிக்கெட் அகாடமிகளுடன் தேர்வாளர்களுக்கு தொடர்பு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் சங்கக்கார உறுதியளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here