மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்: சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை 3% மேல் உயர்வு!

0
7

ஹோர்முஸ் நீரிணையில் அமைந்துள்ள ஈரானின் தீவு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை அடுத்து, அதற்குப் பதிலடியாக ஈரானும் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதனால், உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை திங்கட்கிழமை 3%க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

ஆறு மாதங்களாக நீடித்து வரும் இந்த மோதலால், சர்வதேச சந்தையில் எண்ணெய் விநியோகம் தடைபடுமோ என்ற அச்சம் முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாயொன்று $2.87(3.26%) உயர்ந்து $90.97 ஆகவும், அமெரிக்க WTI ரக மசகு எண்ணெய் பீப்பாயொன்று $2.91 (3.49%) உயர்ந்து $86.31 ஆகவும் விற்பனையானது.

ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஈரானின் ‘லாராக்’தீவு மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தின.

இதற்குப் பதிலடியாக, ஜோர்தானில் உள்ள இரண்டு அமெரிக்க விமானப் படைத்தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பதற்றமான சூழ்நிலை காரணமாக ஹோர்முஸ் நீரிணை வழியிலான சரக்குக் கப்பல்களின் இயக்கம் கடுமையாகக் குறைந்துள்ளது.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நாளொன்றுக்கு 5 கப்பல்கள் மட்டுமே இந்த வழியைக் கடந்து சென்றுள்ளன.

ஈரான் மீது வாரந்தோறும் புதிய தடைகளை விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டின் நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார்.

உலக அளவிலான எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு (20%) இடம்பெறும் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தடையின்றித் தொடர்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here