அன்று தமது அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை கடுமையான முறையில் விமர்சித்தவர்கள், இன்று அதே திட்டங்களே நாட்டின் பொருளாதாரத்தைக் காக்கும் முதன்மை மையங்கள் எனத் தங்கள் வாயாலேயே ஒப்புக்கொண்டுள்ளதை இட்டுத் தாம் மகிழ்ச்சியடைவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் (SLPP) தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
இன்றைய தினம் லுணுகம்வெஹர பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 2005 ஆம் ஆண்டுக்கு முன்னர் அம்பாந்தோட்டை மாவட்டம் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே காணப்பட்டதாகச் சுட்டிக்காட்டினார்.
அக்காலத்தில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை அமைக்கப்பட்டபோது, அது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அம்புல் தியல் கொண்டு செல்வதற்காகவே அமைக்கப்படுவதாக எதிர்த்தரப்பினரால் ஏளனம் செய்யப்பட்டது.
ஆனால், இன்று அதே அதிவேக நெடுஞ்சாலையில் வாகனங்கள் நெரிசலாகப் பயணிப்பதைக் காணமுடிகிறது. அன்று மத்தள விமானநிலையம், அம்பாந்தோட்டை துறைமுகம், கொழும்பு துறைமுக நகரம் (Port City) மற்றும் உமா ஓயா திட்டங்களை எதிர்த்துப் போராட்டம் நடத்தியவர்கள், இன்று நாட்டின் முதலீடுகளை ஈர்ப்பதற்கும் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கும் இந்தத் திட்டங்களே சிறந்தவை என ஒப்புக்கொள்கிறார்கள்.
அன்று இத்திட்டங்கள் மீது குற்றம் சுமத்தியவர்களின் வாயாலேயே இன்று அவற்றின் முக்கியத்துவத்தைப் பேச வைத்துள்ளதையிட்டுத் தாம் பெருமையடைவதாக அவர் தெரிவித்தார்.

தற்போதைய நாட்டின் நிலைமை குறித்துப் பேசிய நாமல் ராஜபக்ஷ, எரிபொருள் விலையேற்றத்தால் மீனவர்கள் கடலுக்குச் சென்று பயன்பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், வறட்சியால் குளங்களில் நீர் வற்றி மீன் வளமும் அழிந்துள்ளதாகக் குறிப்பிட்டார். கடந்த இரண்டு வருடங்களாக அரசாங்கம் எதிர்க்கட்சியையும் ராஜபக்ஷக்களையும் குறை கூறிக்கொண்டிருந்ததே தவிர, நீர்நிலைகளைச் சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர் சாடினார்.
அத்துடன், அரிசி மற்றும் காய்கறிகளை அறுவடை காலத்தில் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதால் உள்நாட்டு விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பரம்பரை பரம்பரையாகச் சேனைப் பயிர்ச்செய்கை செய்துவந்த விவசாயிகளுக்கு இன்று பயிர் செய்ய அனுமதி மறுக்கப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
அரசாங்கத்தின் நிர்வாகச் சீர்கேடுகள் குறித்துத் தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ஆட்சியைப் பிடித்த நாள் முதல் மக்கள் மீது கடுமையான வரிச்சுமையை சுமத்தி அரசாங்கம் துயரத்திற்கு உள்ளாக்கியுள்ளதாகத் தெரிவித்தார். மின்சாரக் கட்டணம் மற்றும் எரிபொருள் விலையேற்றத்திற்கு உலகப் போர்களைக் காரணம் காட்டும் அரசாங்கம், தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்த நிறுவனங்களுக்கு எதிராக எந்தச் சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை எனச் சுட்டிக்காட்டினார்.
துறைமுக மற்றும் நிதி அமைச்சுசார் முறைகேடுகள் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலவுகின்ற போதிலும், மக்கள் மீது வரிகளைச் சுமத்துவதும், அந்த நிதி தவறான கணக்குகளுக்குச் செல்வதும், பின்னர் அதனை ஈடுசெய்ய மீண்டும் புதிய வரிகளை விதிப்பதுமே தற்போதைய அரசாங்கத்தின் வழக்கமான செயல்பாடாக மாறியுள்ளது என்றார்.
தேர்தல் காலத்தில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதாக வாக்குறுதி அளித்த அரசாங்கம், இன்று வேலை கேட்டுச் செல்லும் இளைஞர்களை விரட்டியடிப்பதாகத் தெரிவித்த அவர், பொதுவாகக் காலப்போக்கில்தான் மக்களுக்கு அரசாங்கத்தை வெறுக்கும், ஆனால் இந்த அரசாங்கத்திற்கோ ஆட்சிக் கட்டிலில் ஏறிய நாளிலிருந்தே மக்களைப் பிடிக்காமல் போய்விட்டது எனக் குறிப்பிட்டார்.
எனவே, இனியாவது பொய் கூறுவதையும் மக்களை ஏமாற்றுவதையும் அரசாங்கம் நிறுத்திவிட்டு, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிப் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தொடர்ந்து முன்நின்று போராடும் எனவும் நாமல் ராஜபக்ஷ எம்.பி தனது உரையில் வலியுறுத்தினார்.


