நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, அப்பகுதியில் நிலநடுக்கம் மற்றும் பனிச்சரிவு (Avalanche) காரணமாகவே உருவாகியுள்ளது என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள் சிரேஷ்ட பேராசிரியர் அத்துல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இந்திய மற்றும் சீன எல்லைப் பகுதிக்கு அருகில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, பனி மற்றும் பாறைகள் சரிந்து த்ரிசூலி (Trishuli) ஆற்றில் விழுந்ததால் இந்த பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், பலரும் அடித்துச் செல்லப்பட்டு பெருமளவிலான சேதங்களும் ஏற்பட்டுள்ளன.
இத்தகைய இயற்கை பேரழிவுகள் உலகளவில் புதிதல்ல எனக் குறிப்பிட்ட அவர், 1980-களில் கொலம்பியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சேற்றுச்சரிவு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்த நிகழ்வை நினைவுகூர்ந்தார்.
இலங்கையிலும் இத்தகைய ஆபத்துகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக எச்சரித்த அவர், ‘திட்வா’ சூறாவளி காலத்தில் சரசவிகம பகுதியில் நிலச்சரிவு காரணமாக நீர் செல்லும் வாய்க்கால்கள் அடைபட்டு, பின்னர் சேற்றுடன் கூடிய வெள்ளம் கிராமத்திற்குள் பாய்ந்ததால் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவத்தைச் சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் தளர்வான பாறை அடுக்குகள் கொண்ட மலைப்பாங்கான பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் போது, அருகில் உள்ள ஆறுகள் அல்லது ஓடைகள் அடைபட்டு, பின்னர் நீர் தேங்கி திடீரென உடைந்து பெருக்கெடுக்கும் போது பெரும் வெள்ளப்பெருக்கும் பேரழிவும் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, எதிர்காலத்தில் இவ்வாறான பேரழிவுகளிலிருந்து தப்பிக்க சாதாரண நிலச்சரிவு மண்டலங்களை மட்டும் வரைபடமாக்குவது போதாது என்றும், நிலச்சரிவால் ஆறுகள் அடைபட்டு திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுள்ள அபாயகரமான பகுதிகளைக் கண்டறிந்து வரைபடமாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இத்தகைய முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகள் மூலம் எதிர்காலத்தில் சரசவிகம போன்ற பேரழிவுகளைத் தடுக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

