போலி SLS தரச்சான்று முத்திரையுடன் 8,500 குடிநீர் போத்தல்கள் பறிமுதல்: அவிசாவளையில் நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிரடி முற்றுகை!

0
2

போலியாக இலங்கை தரச்சான்று முத்திரையை (SLS) பயன்படுத்தி சந்தைக்கு விநியோகிக்க தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த சுமார் 8,500 குடிநீர் போத்தல்களை நுகர்வோர் விவகார அதிகாரசபையின் போட்டித்தன்மை ஊக்குவிப்புப் பிரிவின் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

அவிசாவளைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே இத்தொகுதி மீட்கப்பட்டுள்ளது.

அமிதிரிகல, ருவான்வெல்ல பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலையொன்றில் இந்தச் சுத்திகரிக்கப்படாத குடிநீர் உற்பத்தி செய்யப்பட்டு, அவிசாவளையில் உள்ள களஞ்சியசாலையொன்றில் சேமித்து வைக்கப்பட்டிருந்தமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அங்கு 500 மில்லிலீட்டர் முதல் 19 லீட்டர் வரையிலான பல்வேறு அளவிலான போத்தல்களில் போலியான SLS முத்திரை மற்றும் ‘894’ என்ற சான்றிதழ் இலக்கம் அச்சிடப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

சந்தைக்கு விநியோகிக்கப்படுவதற்கு முன்னர் கைப்பற்றப்பட்ட இந்த 8,500 போத்தல்களும் அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டு பொறுப்பேற்கப்பட்டுள்ளதுடன், விசாரணைகளின் பின்னர் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

முறையாகச் சட்டத்தையும் தரக் கட்டுப்பாடுகளையும் பின்பற்றி இயங்கும் வர்த்தகர்கள், வரிகள் மற்றும் உற்பத்திச் செலவுகளைச் சுமந்து பொருட்களின் தரத்தை உறுதி செய்கின்றனர். ஆனால், இவ்வாறான போலி உற்பத்தியாளர்கள் செலவுகளைக் குறுக்கு வழியில் குறைத்து, குறைந்த விலையிலும் அதிக லாப வரம்பிலும் வர்த்தகர்களுக்குப் பொருட்களை வழங்கி, நேர்மையான வர்த்தகர்களுக்கு அநீதியான போட்டி அழுத்தத்தை ஏற்படுத்துவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே, மொத்த மற்றும் சில்லறை வர்த்தகர்கள் குறைந்த விலை அல்லது அதிக லாபம் என்பதற்காக மட்டும் பொருட்களைக் கொள்முதல் செய்யாமல், உற்பத்தியாளர் விவரம் மற்றும் தரச்சான்றின் உண்மைத்தன்மை ஆகியவற்றைச் சரிபார்த்த பின்னரே கொள்முதல் செய்ய வேண்டும் என்றும், சரியான ரசீதுகள் மற்றும் விலைப்பட்டியல்களைப் பேணுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், நுகர்வோரும் குடிநீர் போத்தல்களைக் கொள்முதல் செய்யும்போது அதன் லேபிள் மற்றும் உற்பத்தியாளர் விவரங்களை கவனமாகச் சரிபார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறான போலித் தரச்சான்று முத்திரைகள் அல்லது சந்தேகத்திற்குரிய பொருட்கள் தயாரிக்கப்படுவது அல்லது விற்பனை செய்யப்படுவது தொடர்பில் தகவல் தெரிந்தால், 1977 என்ற நுகர்வோர் அவசர அழைப்பு இலக்கத்திற்குத் தொடர்புகொண்டு அறிவிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை கேட்டுக்கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here