திசைகாட்டி அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ள 22வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் உள்நாட்டு மற்றும் சர்வதேச நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் பலவும் தங்களது எதிர்ப்பையும் கவலையையும் வெளியிட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று (2026.08.19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன:
“திசைகாட்டி அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ள 22வது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் பல உள்நாட்டு மற்றும் சர்வதேச நிறுவனங்கள் தங்களின் எதிர்ப்பையும், அதிருப்தியையும், கவலையையும் தெரிவித்து வருகின்றன. இந்த நிறுவனங்களால் வெளிப்படுத்தப்படும் கவலைகள் மற்றும் எதிர்ப்புகளை சாதாரணமாக புறந்தள்ளிவிட முடியாது. ஏனெனில், ஜனநாயகத்தைப் பேணுதல், சட்டத்தின் ஆட்சி, நீதித்துறையின் சுயாதீனம் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை தத்துவங்களுடன் மிகவும் நெருக்கமாகப் பிணைக்கப்பட்ட தெளிவான நியாயமான காரணங்களை முன்வைத்தே இந்த எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
நீதி வழங்கள் செயற்பாடுகளை விரைவுபடுத்துவதற்காகவே இந்த 22வது திருத்தம் கொண்டுவரப்படுவதாக அரசாங்கம் கூறிவருகிறது. எனினும், 22வது திருத்தத்தைக் கொண்டுவரும் நடைமுறைக்கும், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் பதில்களுக்கும் இடையே எவ்வித தொடர்பும் இல்லை.
அரசாங்கம் முன்வைக்கும் இந்த நியாயங்கள் முற்றிலும் போலித்தனமானவை என்பதை நாட்டின் சட்டத் துறையுடன் தொடர்புடைய அறிஞர்களும், சாதாரண பொதுமக்களும் தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளனர்.
நாட்டில் வழக்குகள் தேங்கிக் கிடப்பதற்கு சட்டமா அதிபர் திணைக்களம், பொலிஸ் திணைக்களம், அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களம் மற்றும் நில அளவைத் திணைக்களம் ஆகியவற்றின் கடமை சார்ந்த தாமதங்களே பிரதான காரணங்களாகும்.
எனவே, நீதி அமைப்பில் ஏற்படும் தாமதமானது நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் தங்கியிருக்கவில்லை. அவ்வாறிருக்கையில், அரசாங்கம் முற்றிலும் தவறான காரணங்களை முன்வைத்து இத்திருத்தத்தை நியாயப்படுத்த முற்படுகிறது. இது தொடர்பில் அமைச்சர்களுக்கோ அல்லது பாடப்பொறுப்புள்ள அமைச்சருக்கோ தெளிவான பதில்கள் இல்லை.
இந்த 22வது திருத்தத்தின் மூலம் திசைகாட்டி அரசாங்கத்தின் சர்வாதிகாரப் போக்கு வெளிப்பட்டுள்ளது. மேலும், தேர்தல்கள், பிரதிநிதித்துவ ஜனநாயகம் மற்றும் மக்கள் ஆணை தொடர்பில் அரசாங்கத்திற்கு இருக்கும் விருப்பமின்மையை இது காட்டுகிறது.
எனவே, நாட்டின் குடிமக்கள் இந்த விவகாரத்தை நுணுக்கமாக அவதானித்து விழிப்புடன் குரல் கொடுக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.

