எல் நினோ தாக்கத்தால் உலகளவில் 4.9 கோடி பேர் கடுமையான பட்டினியை எதிர்கொள்ளக் கூடும்: ஐ.நா எச்சரிக்கை!

0
6

எல் நினோ காலநிலை மாற்றக் காரணியின் தீவிர தாக்கத்தால் உலகளவில் மேலும் 4 கோடியே 90 இலட்சம் பேர் கடுமையான பட்டினி மற்றும் உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்படக்கூடும் என ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு பாதுகாப்பு அமைப்பு எச்சரித்துள்ளது.

உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள 45 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், கடுமையான உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தற்போதுள்ள 22 கோடியே 50 இலட்சத்தில் இருந்து 27 கோடியே 40 இலட்சமாக அதிகரிக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பசிபிக் பெருங்கடலின் நீர்மட்ட வெப்பநிலை சுமார் 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் இந்த எல் நினோ நிகழ்வு, செப்டெம்பர் முதல் டிசெம்பர் வரையிலான காலப்பகுதியில் உச்சத்தை அடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதுடன், இதன் தாக்கம் அடுத்த ஆண்டில் விவசாய உற்பத்திச் சுழற்சியிலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இதில் குறிப்பாக மத்திய அமெரிக்கப் பகுதிகள் அதிகளவில் பாதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, தெற்கு மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவில் ஏற்படக்கூடிய வறட்சி மற்றும் சீரற்ற பருவமழை காரணமாக 1 கோடியே 80 இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்படக்கூடும் என்றும் அந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here