மக்கள் பிரதிநிதிகளின் சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களை அறியும் மக்களின் உரிமை பாதுகாக்கப்பட்டுள்ளது: சுகாதார அமைச்சரின் உறுதிமொழி

0
3

பொதுமக்களின் பிரதிநிதிகளின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய விபரங்களை அறிந்துகொள்வதற்கான மக்களின் உரிமை முழுமையாகப் பாதுகாக்கப்படும் என்றும், அந்த உரிமையைப் பாதிக்கும் வகையில் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படாது என்றும் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ உறுதிளித்துள்ளார்.

சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ மற்றும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார ஆகியோர் கொழும்பு பேராயர் அதிவணக்கத்திற்குரிய மெல்கம் கார்டினல் ரஞ்சித் ஆண்டகையை கொழும்பு பேராயர் இல்லத்தில் சந்தித்து விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

தற்போது நாட்டில் பரவலான கவனத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ள நீதி மற்றும் சிறைச்சாலைத் துறையின் தற்போதைய நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் அமல்படுத்தப்படவுள்ள விசேட சீர்திருத்தங்கள் குறித்து பேராயருக்கு தெளிவுபடுத்துவதே இச்சந்திப்பின் முக்கிய நோக்கமாகும்.

மேலும், இது தொடர்பாக சமூகத்தில் பரப்பப்பட்டு வரும் தவறான தகவல்களுக்கான உண்மை நிலையை விளக்குவதும் இதன் நோக்கமாக அமைந்தது.
நீதி மற்றும் சிறைச்சாலைத் துறையில் உள்ள தற்போதைய சவால்களுக்குத் தீர்வு காண்பது, நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துவது மற்றும் காலதாமதமின்றி நீதியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு அரசாங்கம் எடுத்துள்ள நேர்மறையான நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால சீர்திருத்தங்கள் குறித்து அமைச்சர்கள் இருவரும் பேராயருக்கு விரிவாக விளக்கமளித்தனர்.

இச்சந்திப்பைத் தொடர்ந்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ, ஊழல் எதிர்ப்புச் சட்டத் திருத்தம் குறித்துக் கருத்துத் தெரிவித்தார்.

அப்போது, மக்கள் பிரதிநிதிகளின் சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களை மக்கள் எந்த நேரத்திலும் அறிந்துகொள்ள முடியும் என்றும், அதற்குரிய உரிமைக்கு எவ்வித இடையூறும் ஏற்படாது என்றும் குறிப்பிட்டார்.

அரசு அதிகாரிகள் மற்றும் சட்டப்பூர்வ நிறுவனங்களின் அதிகாரிகளின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை பகிரங்கப்படுத்துவது, அவர்களின் அரசு அல்லது தனியார் பணிச்சூழலில் தனிப்பட்ட வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால், அந்தத் துறைகளில் மட்டுமே சில திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

அரசியலமைப்பு திருத்தம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், அரசியலமைப்பை திருத்துவதாயின் அதற்குரிய கால அவகாசம் தேவை என்றும், நாடாளுமன்றத்திற்குள்ளும் அதற்கு வெளியேயும் இது குறித்து விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அரசியலமைப்புத் திருத்தத்திற்கு முன்னதாக பொருளாதாரத்தை வலுப்படுத்துதல், ஜனநாயகத்தை உறுதிப்படுத்துதல் மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துதல் போன்ற நாட்டின் பல முக்கிய பிரச்சினைகளுக்‌குத் தீர்வு காண வேண்டியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அனைத்துத் தேர்தல்களையும் உரிய காலத்தில் நடத்துவதே அரசாங்கத்தின் இலக்கு என்றும், மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

இச்சந்திப்பின் போது நீதி மற்றும் சிறைச்சாலை சீர்திருத்தங்கள் குறித்து நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவும் தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here