ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான பேச்சுகள் நாட்டில் மீண்டும் தீவிரமடைந்துள்ளன.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் மற்றும் முன்னாள் ஜனாதிபதிச் செயலாளர் ஆகியோருக்கு நீதிமன்றத்தினால் தண்டனை விதிக்கப்பட்ட சம்பவங்கள் அண்மையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.
எனினும், இந்த ஒட்டுமொத்த சம்பவத்திலும் அனைவரும் மறந்த, உரையாடப்படாத ஒரு முக்கியமான பக்கம் காணப்படுவதாக சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் இன்று கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்:
“ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் பல்வேறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. தற்போது சட்டமா அதிபர் திணைக்களம் இது தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்வதும், குற்றப்பத்திரிகைகளை வழங்குவதையும் நாம் காண்கிறோம்.
ஆனால், இந்த ஆணைக்குழு அறிக்கையில் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு எதிராகச் செய்யப்பட்டுள்ள பரிந்துரைகள் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவே இல்லை.
2017 ஆம் ஆண்டில், பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு தொடர்பான தகவல்களைக் கண்டறிந்து, அவர்களின் உறுப்பினர்களைக் கைது செய்வதற்குச் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் சட்ட ஆலோசனைகளைக் கோரியிருந்தனர்.
ஆனால், சட்டமா அதிபர் திணைக்களம் அந்த ஆலோசனைகளை வழங்குவதில் தேவையற்ற தாமதத்தை ஏற்படுத்தியது.
அன்று சரியான நேரத்தில் சட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டிருந்தால், இந்த ஈஸ்டர் தாக்குதலைத் தடுத்திருக்க முடியும். எனவே, இந்தத் தாமதத்திற்குப் பொறுப்பான சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நாட்டின் நீதித்துறை மற்றும் சட்டத்தின் சுயாதீன தன்மையை உறுதி செய்வதற்குச் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பங்களிப்பு மிகவும் அவசியமானது.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையிலேயே சட்டமா அதிபர் திணைக்களம் பொய்யான வாக்குமூலங்களை அளிக்குமாயின், நாட்டின் சட்டத்தின் நிலை என்னாவது?
அதேபோன்று, நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது தொடர்பாக தற்போது தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகின்றது. நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரித்தாலும் சரி, குறைத்தாலும் சரி, அதனால் நீதிமன்ற வழக்குகளின் விசாரணை வேகம் அதிகரிக்கப் போவதில்லை.
கடந்த காலங்களிலும் இவ்வாறான ஓய்வுபெறும் வயது மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
எனவே, வழக்கு விசாரணைகளை விரைவுபடுத்த வேண்டுமானால், ஓய்வுபெறும் வயதை மாற்றுவதை விடுத்து, ‘மறுசீரமைப்பு அலுவலகத்தை’ (Reforms Office) உடனடியாக நிறுவுவதற்கே அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.


