முந்தைய ஆட்சியில் EPF, ETF நிதியில் 3,000 கோடி ரூபாய் துஷ்பிரயோகம்: விசாரணைக்கு விசேட குழு நியமனம்

0
8

முந்தைய அரசாங்கங்களின் ஆட்சிக் காலத்தில் ஊழியர் சேமலாப நிதியம் (EPF) மற்றும் ஊழியர் நம்பிக்கைப்பொறுப்பு நிதியம் (ETF) ஆகியவற்றில் சுமார் 3,000 கோடி ரூபாய் வரையிலான பெருந்தொகை நிதி துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் கட்டுநாயக்கவிலுள்ள முதலீட்டுச் சபை (BOI) கேட்போர் கூடத்தில் நடைபெற்ற விசேட நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார்.

கடந்த காலங்களில் மத்திய வங்கியின் பிணைமுறி கொடுக்கல் வாங்கல்கள், பங்குச்சந்தையில் மேற்கொள்ளப்பட்ட திட்டமிடப்படாத முதலீடுகள் மற்றும் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படாத பல்வேறு தனியார் நிறுவனங்களில் செய்யப்பட்ட முறையற்ற முதலீடுகள் ஊடாகவே இந்த நிதி விரயம் மற்றும் துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளதாக பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் உழைக்கும் வர்க்கத்தின் வியர்வையினாலும் அர்ப்பணிப்பினாலும் சேமிக்கப்படும் இந்த நிதியை, முந்தைய ஆட்சியாளர்கள் தங்களின் குறுகிய அரசியல் மற்றும் தனிப்பட்ட நலன்களுக்காகப் தவறாகப் பயன்படுத்தியுள்ளதாக அவர் சாடினார்.

அத்துடன், இத்தகைய நிதித் துஷ்பிரயோகங்களை எதிர்காலத்தில் முற்றாகத் தடுக்கும் பொருட்டு அரசாங்கம் முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன் ஒரு கட்டமாக, ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கைப்பொறுப்பு நிதியம் ஆகிய இரண்டையும் ஒரே ஒருங்கிணைந்த நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் கொண்டுவருவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழுவினால் சமர்ப்பிக்கப்படும் அறிக்கையின் அடிப்படையில், தொழிலாளர்களின் நிதியைப் பாதுகாப்பதற்கான சட்டபூர்வ மற்றும் சீர்திருத்த நடவடிக்கைகள் உடனடியாக முன்னெடுக்கப்படும் என்றும் பிரதி அமைச்சர் மேலும் உறுதிபடத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here