பக்திக் கடலில் பொரளை – தெமட்டகொடை: ஸ்ரீ மகா அகோர வீர பத்திரகாளியம்பாள் தேவஸ்தானத்தின் மகோன்னதத் தேர்த்திருவிழா மிகப்பிரமாண்டமாக நிறைவு!

0
10

கொழும்பு – 08, பேஸ்லைன் வீதி, சஹஸ்புர பகுதியில் அமையப்பெற்றுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ மகா அகோர வீர பத்திரகாளியம்பாள் தேவஸ்தானத்தின் 19 ஆம் ஆண்டு வருஷாபிஷேக மஹோற்சவத்தின் சிகர நிகழ்வான மகோன்னதத் தேர்த்திருவிழா பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ, பக்திப் பெருவெள்ளத்தில் மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது.

மாண்புமிகு இராவணேஸ்வர மன்னரால் போற்றிப் புகழப்பட்ட இந்த இந்து மஹா சமூகத்தினால் சூழப்பட்ட கொழும்பு மாநகரின் புண்ணிய ஷேத்திரத்தில் வீற்றிருந்து, நாடிவரும் பக்தர்களின் கோடி துயர்களைத் தீர்த்து அருள் பாலிக்கும் ஸ்ரீ மகா அகோர வீர பத்திரகாளியம்பாள், அருள்மிகு தேரில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.

இந்த வரலாற்று சிறப்புமிக்க தேர் பவனியானது, ஆன்மீகக் களஞ்சியமாகவும் தமிழர்களின் பாரம்பரியக் கலைகளின் சங்கமமாகவும் திகழ்ந்தது. புனித யானைகள் முன்னே செல்ல, மங்கல வாத்தியங்கள் மற்றும் கம்பீரமான பேண்ட் வாத்தியங்கள் முழங்கத் தேர் பவனி ஆரம்பமானது.

பக்தர்களின் பக்திப் பரவசத்தை உச்சத்திற்குக் கொண்டு செல்லும் வகையில் பறவைக்காவடி, தூக்குக்காவடி எடுத்த பக்தர்கள் நேர்த்திக்கடன்களைச் செலுத்தினர். அத்துடன், எம் பாரம்பரியக் கலைகளான காவடியாட்டம், கோலாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், குதிரையாட்டம் மற்றும் அதிர வைக்கும் யாழ் மேளக் கச்சேரிகளுடன் கலை நிகழ்ச்சிகள் அணிவகுத்து வந்தன.

தெமட்டகொடை மற்றும் பொரளை ஆகிய பிரதேசங்களின் முக்கிய வீதிகள் வழியாகத் திருத்தேர் பவனி வந்தபோது, வழிநெடுகிலும் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் “ஓம் சக்தி”, “அரோகரா” என்ற பக்தி கோஷங்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்து அம்மனை தரிசித்து அருள் பெற்றனர்.

கடந்த ஜூலை 05 ஆம் திகதி (05-07-2026) ஞாயிற்றுக்கிழமை கணபதி ஹோமம், அங்குரார்பணம் மற்றும் சிம்மக் கொடியேற்றத்துடன் துவங்கிய இத்திருவிழாவில் பல சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றன.

தொடர்ந்து ஜூலை 19 ஆம் திகதி பால்குட பவனி, சிறப்பு பூஜைகள் மற்றும் பெருந்திரளான அன்னதான நிகழ்வு இடம்பெற்றதுடன், ஜூலை 20 ஆம் திகதி வசந்தமண்டப பூஜை நடைபெற்று, சர்வ அலங்கார பூஷிணியாக ஸ்ரீ காளியம்பாள் தேரில் எழுந்தருளி பொரளை, தெமட்டகொடை வீதிகளில் பவனி வந்தார். அதனைத் தொடர்ந்து ஜூலை 21 ஆம் திகதி கடல் மாதாவும் களனி நதிக்கரையும் சங்கமிக்கும் முகத்துவாரம் டிலாசால் கடற்கரையில் தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

மேலும், எதிர்வரும் ஜூலை 25 ஆம் திகதி மாலை 8.00 மணிக்கு மஹா அன்ன முனீஸ்வரர் வீதி உலாவும், அதனைத் தொடர்ந்து மகத்தான அன்னதானமும் நடைபெறவுள்ளது.

இவ்விழாவிற்கான தேர் உபயத்தினை நிர்மால், சுதா குடும்பத்தினரும், அன்னதான உபயத்தினை சிவலிங்கம், கண்ணா குடும்பத்தினரும், மங்கல வாத்திய உபயத்தினை அம்பிகை அடியார்கள் ரங்கா தனுஜா குடும்பத்தினரும் வழங்கி சிறப்பித்துள்ளனர்.

ஆலய பரிபாலன சபையினர் சார்பில், சித்தர் பீட இளவரசன் சஹன் விராஜ் சாமியின் மிகச் சிறப்பான மற்றும் நேர்த்தியான தலைமையில் இவ்விழா எவ்வித தடையுமின்றி, மிக பிரம்மாண்டமாக முன்னெடுக்கப்பட்டு மகா சக்தியின் பேரருளோடு நன்முறையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

கொழும்பின் பல பாகங்களிலிருந்தும் வருகை தந்த பல்லாயிரக்கணக்கான ஆன்மீக அன்பர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டு அம்பாளின் திவ்ய அருளைப் பெற்றுச் சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here