இங்கிலாந்து ஆண்கள் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கான போட்டியில் தான் இல்லை என்பதை அவுஸ்திரேலியா மற்றும் உலக நாடுகளின் முன்னணி பயிற்சியாளரான ஆண்டி பிளவர் (Andy Flower) அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
அண்மையில் பென் ஸ்டோக்ஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து பிரண்டன் மெக்கல்லம் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையிலேயே, அடுத்த தலைமைப் பயிற்சியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருந்த வேளையில் ஆண்டி பிளவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
லண்டன் ஸ்பிரிட் (London Spirit) அணியின் தலைமைப் பயிற்சியாளராக செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஆண்டி பிளவர், இதற்கான முக்கிய காரணத்தை விளக்கியுள்ளார்:
“ஐபிஎல் தொடரின் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் பயிற்சியாளராக இருந்து கொண்டு, அதே நேரத்தில் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளராகவும் செயல்படுவது சாத்தியமற்ற ஒன்று. குறிப்பாக, இங்கிலாந்தின் கோடைகால கிரிக்கெட் ஆரம்பிக்கும் அதே காலகட்டத்தில்தான் ஐபிஎல் தொடரும் நடைபெறுகிறது. நான் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக இருந்தால், இங்கிருந்தபடி உள்நாட்டு வீரர்களின் ஆட்டங்களை நேரடியாகக் கண்காணித்து அவர்களுடன் தொடர்பில் இருக்கவே விரும்புவேன். இரண்டு பொறுப்புகளையும் ஒரே நேரத்தில் கையாள்வது என்னால் முடியாது.” என குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் (ECB) நிர்வாக இயக்குநர் ராப் கீயுடன் (Rob Key) தான் பேசியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், தற்போதைக்கு தான் செய்யும் உலகளாவிய லீக் பணிகளில் மிகவும் திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ஆண்டி பிளவர் ஏற்கனவே 2007 இல் இங்கிலாந்தின் உதவிப் பயிற்சியாளராகவும், பின்னர் 2009 முதல் 2014 வரை தலைமைப் பயிற்சியாளராகவும் செயல்பட்டு பல வரலாற்று வெற்றிகளைப் பெற்றுத் தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

