நாட்டிலுள்ள விமான நிலையங்கள் மற்றும் விமான ஓடுதளங்களுக்கு அருகாமையில் காற்றாடி பறக்கவிடுவதை முழுமையாகத் தவிர்க்குமாறு இலங்கை விமானப்படை பொதுமக்களிடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது நிலவும் காற்றாடிப் பருவ நிலை காரணமாக, இத்தகைய பகுதிகளில் காற்றாடிகளைப் பறக்கவிடுவது அதிகரித்துள்ளதாகவும், இது விமானங்களின் பாதுகாப்பிற்கு கடுமையான அச்சுறுத்தலாக மாறியுள்ளதாகவும் விமானப்படை சுட்டிக்காட்டியுள்ளது.

உலகளவில் நிகழும் விமான விபத்துக்களுக்கு விமான ஓடுதளங்களுக்கு அருகில் காற்றாடி பறக்கவிடுவதே முக்கிய காரணங்களில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இது விமானப் பறப்பு நடவடிக்கைகளுக்கு நேரடிப் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இலங்கையின் கட்டுநாயக்க, இரத்மலானை, இங்குராக்கொட, சீனக்குடா, அனுராதபுரம், பலாலி, கட்டுகுருந்த, கொக்கலை, வவுனியா, வீரவில மற்றும் மத்தள ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள முக்கிய விமான ஓடுதளங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் இவ்வாறு காற்றாடிகள் பறக்கவிடப்படுவது தற்போது அதிக ஆபத்தான நிலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆபத்தான சூழ்நிலையை உறுதிப்படுத்தும் வகையில், இன்றைய தினம் (2026.07.15) இரத்மலானை விமான நிலையத்திலிருந்து பயிற்சிப் பறப்பிற்காகப் புறப்பட்ட Y-12 ரக விமானம் ஒன்று காற்றாடி நூல்களினால் பெரும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளது. பயிற்சியில் ஈடுபட்டிருந்த அந்த விமானம், உடனடியாக மீண்டும் இரத்மலானை விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்பப் பரிசோதனையின் போது, விமானத்தின் இடது பக்க சக்கரம், இடது பக்க இயந்திரப் பகுதி மற்றும் மேலும் சில பாகங்களில் பெருமளவிலான காற்றாடி நூல்கள் சிக்கியிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

விமானம் ஒன்றின் இயந்திரத்திற்குள்ளோ அல்லது அதன் செயல்பாட்டுத் தொகுதிக்குள்ளோ காற்றாடி நூல்களோ அல்லது அதன் பாகங்களோ உட்சென்றால், முழு விமானமும் கடுமையான விபத்துக்குள்ளாகும் நேரடி அபாயம் உள்ளதாக விமானப்படை எச்சரித்துள்ளது. இதன் மூலம் பெருமளவிலான உயிர்ச் சேதங்களும் உடமைச் சேதங்களும் ஏற்பட வாய்ப்புகள் மிக அதிகம் என்பதால், விமானப் பயணங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், பயணிகளின் உயிரைப் பாதுகாக்கவும் விமான நிலையங்கள் மற்றும் ஓடுதளங்களைச் சுற்றி வசிக்கும் பொதுமக்கள், அப் பகுதிகளில் காற்றாடிகளைப் பறக்கவிடுவதை முற்றாகத் தவிர்க்குமாறு விமானப்படை ஊடகப் பிரிவின் பணிப்பாளர் குரூப் கேப்டன் நலின் வெவகும்பூர கேட்டுக்கொண்டுள்ளார்.

முதலாவது பட விளக்கம்:
காற்றாடி நூல்கள் சிக்கியதால் ஆபத்தை எதிர்கொண்டு அவசரமாகத் தரையிறக்கப்பட்ட Y-12 ரக விமானம் இரத்மலானை விமான நிலையத்திலிருந்து புறப்பட முன்னர் சமிக்ஞைகளை பெற்றுக்கொள்ளுகின்றது.


