நீதித்துறையின் சுயாதீனத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பிரதம நீதியரசரின் பதவிக்காலத்தை நீடிக்க அரசாங்கம் முயற்சி – ஊழல் எதிர்ப்பு முன்னணியின் அழைப்பாளர் நிரோஷன் பாதுக்க குற்றச்சாட்டு

0
5

உயர்நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதன் மூலம், தற்போதைய அரசாங்கம் நீதித்துறைக்குள் நேரடி அரசியல் தலையீடுகளை மேற்கொள்ள முயற்சிப்பதாக ஊழல் எதிர்ப்பு முன்னணியின் அழைப்பாளர் நிரோஷன் பாதுக்க தெரிவித்துள்ளார்.

எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் முதன்மைக் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 1972 மற்றும் 1978ஆம் ஆண்டு அரசியலமைப்புகளின்படி, உயர்நீதிமன்ற நீதிபதியொருவர் 65 வயதிலும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியொருவர் 63 வயதிலும் ஓய்வுபெற வேண்டும் எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என்றார். எனினும், தற்போதைய அரசாங்கம் இந்த ஓய்வுபெறும் வயதை மேலும் நீடிப்பதற்குத் தீர்மானித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க எதிர்க்கட்சியில் இருந்தபோது இது குறித்து எந்தவொரு கருத்தையும் வெளியிட்டிருக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தின்படி, பிரதம நீதியரசர் உள்ளிட்ட உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 11 இலிருந்து 19 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 12 இருந்து 20 ஆகவும் அதிகரிக்கப்பட்ட போதிலும், கடந்த சில மாதங்களில் நீதித்துறை அமைப்பில் 8 நீதிபதி வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த வெற்றிடங்களுக்கான பெயர்களை ஜனாதிபதி இதுவரை பரிந்துரைக்கவில்லை என்றும், தகுதியான பெயர்களை அனுப்புமாறு அரசியலமைப்பு சபையும் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ள இவ்வாறானதொரு பின்னணியில், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கே ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் முன்னுரிமை வழங்கி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

எதிர்வரும் நவம்பர் மாதத்துடன் தற்போதைய பிரதம நீதியரசர் ஓய்வுபெற வேண்டும் எனத் தெரிவித்த நிரோஷன் பாதுக்க, ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதாயின், அது ஏன் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட வேண்டும் எனக் கேள்வி எழுப்பினார். அத்துடன் நாட்டின் நீதவான் நீதிமன்ற நீதிபதிகள், மருத்துவர்கள் மற்றும் அரச சேவையின் ஏனைய உயர் அதிகாரிகளின் ஓய்வுபெறும் வயதும் அதிகரிக்கப்பட வேண்டும் அல்லவா என்றும் அவர் வினவினார்.

அரசாங்கத்தின் ‘பொற்கால நாடொன்று – அழகான வாழ்க்கையொன்று’ கொள்கைப் பிரகடனத்தில், புதிய அரசியலமைப்பொன்று கொண்டுவரப்படும் எனக் கூறப்பட்டு, அதன்கீழ் 16 விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ள போதிலும், அதில் பிரதம நீதியரசரின் பதவிக்காலத்தை அல்லது வயதை நீடிப்பது குறித்து எங்கும் குறிப்பிடப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார். இலங்கையின் வரலாற்றில் இதற்கு முன்னர் இருந்த எந்தவொரு ஜனாதிபதியும் பிரதம நீதியரசரின் பதவிக்காலத்தை நீடிப்பதற்கு நடவடிக்கை எடுத்ததில்லை எனக் குறிப்பிட்ட அவர், நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படும் என இவர்களது கொள்கைப் பிரகடனத்தில் உறுதியளிக்கப்பட்டிருந்த போதிலும், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அதனைச் செய்யாமல் தட்டிக்கழித்து வருவதாகவும் தெரிவித்தார்.

பிரதம நீதியரசர் ஓய்வுபெறுவதால் நாட்டின் நீதித்துறை கட்டமைப்பு ஒருபோதும் வீழ்ச்சியடைந்துவிடாது எனத் தெரிவித்த அவர், ஆனால் அவரது பதவிக்காலத்தை நீதிப்பதானது நீதித்துறையின் சுயாதீனத்தன்மைக்குக் கடுமையான மற்றும் நேரடிப் பாதிப்பை ஏற்படுத்தும் என்றார். தற்போது நீதித்துறை முறைமையானது அரசியல்மயப்படுத்தப்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது எனக் குறிப்பிட்ட அவர், பிரதம நீதியரசரின் பதவிக்காலத்தை நீடிக்க வேண்டிய தேவை நாட்டு மக்களுக்கு இல்லை என்றும், அது தற்போதைய அரசாங்கத்திற்கே உள்ளது என்றும் தெரிவித்தார்.
இந்தச் சூழ்நிலையில், நாட்டின் சிவில் அமைப்புகள், சட்டத்தரணிகள் சங்கம், அறிஞர்கள் மற்றும் பொது மக்கள் எனப் பலரும் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்குக் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு வருவதாகவும், ஜனாதிபதியின் இந்த தன்னிச்சையான செயல் அவரது ஆட்சிக்கு நற்பெயரைத் தராது என்றும் அவர் எச்சரித்தார்.

அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தில் உள்ள விடயங்களைச் செயல்படுத்துவதற்காகவே மக்கள் இந்த அரசாங்கத்திற்குப் பெரும்பான்மை பலத்தை வழங்கினார்களே தவிர, அரசியலமைப்பைத் திருத்தி நீதித்துறைக்கு அழுத்தம் கொடுப்பதற்காக அல்ல என்று குறிப்பிட்ட அவர், ஜனாதிபதியும் அரசாங்கமும் நீதித்துறையின் சுயாதீனத்தன்மைக்கு விடுக்கும் இந்த சவால்களுக்கு எதிராக, சமகி ஜன பலவேகய மற்றும் அதன் சட்டத்தரணிகள் சங்கம் இணைந்து சட்ட ரீதியான மற்றும் அரசியல் ரீதியான அனைத்துப் போராட்டங்களையும் முன்னெடுக்கும் என்றும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here