2030ஆம் ஆண்டளவில் 2.5 பில்லியன் டொலர் தேயிலை ஏற்றுமதி வருமானத்தையும், 400 மில்லியன் கிலோகிராம் முடிவுற்ற தேயிலை உற்பத்தியையும் இலக்காகக் கொண்டு, இலங்கையின் சிறு தோட்டத் தேயிலைத் துறையை வலுப்படுத்தும் நோக்குடன் அரசாங்கம் ‘சிலோன் தேயிலைக் கிராமம் (சிலோன் டீ வில்லேஜ்)’ திட்டத்தை ஆரம்பித்துள்ளது.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தலைமையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற விசேட விளக்கமளிப்புக் கூட்டத்தின் போது இத்திட்டம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு, சிறு தேயிலைத் தோட்ட அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிறுவனம் , இலங்கை தேயிலை சபை மற்றும் தேசிய பெருந்தோட்ட அபிவிருத்தி நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து நாடு முழுவதும் 500 தேயிலை கிராமங்களை நிறுவுவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த முன்முயற்சியின் மூலம் பசுந்தேயிலை (கொழுந்து) விளைச்சலை அதிகரித்தல் மற்றும் சிறு தோட்ட உரிமையாளர்களின் வருமானத்தை மேம்படுத்தல், மதிப்பு கூட்டப்பட்ட தேயிலை தயாரிப்புகளை அறிமுகப்படுத்துதல், தேயிலை பயிர்ச்செய்கையை சுற்றுலாவோடு ஒருங்கிணைத்தல், நிலையான விவசாய முறைகளை ஊக்குவித்தல், தேர்ந்தெடுக்கப்பட்ட தேயிலை வளர்க்கும் கிராமங்களில் உட்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் தேயிலை உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்களை நிறுவுதல் ஆகிய இலக்குகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

