இஸ்ரேலின் ஆக்கிரமிப்புப் பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் இறக்குமதியைத் தடை செய்யுமாறு, 40-க்கும் மேற்பட்ட முன்னணி ஐரோப்பிய ஒன்றிய சட்ட வல்லுநர்கள் ஐரோப்பிய ஆணைக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளனர்.
ஐரோப்பிய ஆணைக்குழுவின் முன்னாள் வர்த்தகத் தலைவர் இக்னாசியோ கார்சியா பெர்செரோ உள்ளிட்ட முக்கிய சட்ட நிபுணர்கள் இதற்கான சட்டக் கருத்தை முன்வைத்துள்ளனர்.
ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் உர்சுலா வொன் டெர் லேயன், ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகாரக் கொள்கை தலைவர் கஜா கல்லாஸ் மற்றும் வர்த்தக ஆணையாளர் மரோஸ் செஃப்கோவிக் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ள இந்த சட்டக் குறிப்பில், சர்வதேச சட்டத்தின்படி சட்டவிரோதமானதாகக் கருதப்படும் ஆக்கிரமிப்புப் பகுதிகளின் வர்த்தகத்தை ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தகக் கொள்கை அதிகாரங்களைப் பயன்படுத்தித் தடுத்து நிறுத்த முடியும் என அவர்கள் வாதிட்டுள்ளனர்.
இத்தகைய தடையை விதிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் அனைத்து உறுப்பு நாடுகளின் ஏகமனதான ஆதரவு தேவை என்ற வாதத்தை இந்த வல்லுநர்கள் நிராகரித்துள்ளனர்.
இத்தகைய கருத்துகள் சட்டப்பூர்வமானவை அல்ல, மாறாக அரசியல் நோக்கம் கொண்டவை என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ரஷ்ய எரிவாயு இறக்குமதி மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டுப்பாடுகளை இதற்கான ஒரு முன்னுதாரணமாகவும் அவர்கள் முன்வைத்துள்ளனர்.
எதிர்வரும் ஜூலை 13 அன்று நடைபெறவுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகாரக் பேரவைக் கூட்டத்திற்கு முன்னதாக, ஆணைக்குழு இது தொடர்பான புதிய நடவடிக்கைகளை முன்மொழியும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சட்ட வல்லுநர்களின் இந்த கோரிக்கை முக்கியத்துவம் பெறுகிறது.

